வடக்கு ஐரோப்பியாவில் உள்ள லித்வேனியா என்ற நாட்டில் 26 வயது இளைஞர் ஒருவர் சுமார் 10 லட்சம் நாணயங்களை கொண்டு 1 மீட்டர் உயர பிரமிடு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து செயல்பட்டு வரும் லித்வேனியா நாட்டில் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஐரோப்பாவின் யூரோ நாணயம் பயன்படுத்தப்படவுள்ளது. எனவே இதுவரை லித்வேனியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த லிட்டாஸ் என்ற நாணயம் வரும் ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு செல்லாது. இதனால் லித்வேனியா நாட்டை சேர்ந்த 26 வயது இளைஞன் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ் என்பவர் லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க முடிவு செய்தார்.
சுமார் ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் ஒருவார காலம் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த பிரமிடுக்கு தேவையான மொத்த நாணயங்களின் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதற்கு முன்னர் 6 லட்சம் நாணயங்களை வைத்து பிரமிடு செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளத் குறித்து டாமஸ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதில் பயன்படுத்தபட்ட நாணயங்கள் இறுதியில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட இருக்கிறது.