கொஞ்சம் கொஞ்சமாக மலட்டுத்தன்மையாக்கும் அன்றாட விஷயங்கள்!

love, family, phychology and relationship problems concept - you

இன்றைய காலத்தில் திருமணமான தம்பதியர்கள் சந்திக்கும் ஒன்று தான் குழந்தைப் பெறுவதில் இருக்கும் பிரச்சனை. இதற்கு வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து பின்னர் திருமணம் செய்து கொள்வது எனலாம். ஏனெனில், நல்ல நிலைக்கு வருவதற்குள் 30 வயதாகிவிடுகிறது. இந்த வயதில் இனப்பெருக்க மண்டலத்தின் சக்தி குறைந்துவிடுவதால், கருத்தரித்த முடியாமல் போய்விடுகிறது.

அதுமட்டுமின்றி, நாகரீகம் வளர்ந்துவிட்டது என்று பலரும் மோசமான வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கங்களையும் அன்றாடம் பின்பற்றி வருகிறோம். இப்படி பின்பற்றுவதால், இனப்பெருக்க மண்டலமானது கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, திருமணம் முடிந்த பின் குழந்தைப் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஆகவே 20 வயதிற்கு மேல் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கை முறையிலும், பழக்கவழக்கத்திலும் சிறிது கவனம் செலுத்தி வர வேண்டியது அவசியம். இங்கு அப்படி உங்களை கொஞ்சம் கொஞ்சமாக மலட்டுத்தன்மையாக்கும் விஷயங்களை பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, உங்களை மாற்றிக் கொள்ளுங்களேன்…

லேப்டாப் 

தற்போது அனைவரிடத்திலும் லேப்டாப் என்னும் மடிக்கணினி உள்ளது. இதனை நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்துவதால், குறிப்பாக ஆண்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால், விந்தணுவின் தரம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன்

உடல் பருமன் ஏற்பட்டால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதோடு, மலட்டுத்தன்மையையும் சந்திக்கக்கூடும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும். அதுவும் ஆண்களுக்கு குறைவான விந்தணுவின் எண்ணிக்கையும், பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவதோடு, கருச்சிதைவு ஏற்படவும் கூடும். ஆகவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தல்

தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிகரெட் பிடிக்கின்றனர். இப்படி தினமும் ஒன்று என சிகரெட் பிடித்தாலும், அது இனப்பெருக்க மண்டலத்தின் சக்தியை குறைப்பதோடு, ஆண்களுக்கு விந்தணுவின் தரம், பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். ஆகவே புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

இறுக்கமான உள்ளாடை

எப்போதும் உள்ளாடையை இறுக்கமாக அணிந்தால், ஆண்களின் விதைப்பை புண்ணாவதோடு, வெப்பமடைந்து விந்தணுவின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே எப்போதும் லூசாக இருக்கும் உள்ளாடையை அணிய வேண்டும்.

மொபைல் போன்

மொபைல் போன் கைக்கு அடக்கமாக உள்ளது என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி வைத்துக் கொள்வதால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள் விந்தணுவின் தரத்தை பாதித்து, நாளடைவில் கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

சோப்பு

சோப்புகளில் உள்ள ட்ரைக்ளோசனுக்கும், மலட்டுத்தன்மை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இந்த ட்ரைக்ளோசன் உள்ள சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால், அவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே சோப்புக்களை வாங்கும் முன், ட்ரைக்ளோசன் உள்ளதா என பார்த்து வாங்குங்கள்.

சோயா உணவுகள்

சோயா உணவுப் பொருட்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது தான் என்றாலும், உணவில் சோயாவை அதிகம் சேர்த்து வந்தால், அவை விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதற்காக இந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டாம். அவ்வப்போது அளவாக சேர்த்து வந்தால் நல்லது.

குறைவான கொழுப்புள்ள பால் பொருட்கள்

ஐஸ் க்ரீம் மற்றும் பால் போன்றவை கருவுறுதலுக்கு உதவி புரியும். ஆய்வு ஒன்றில் குறைவான கொழுப்புள்ள பால் பொருட்களை அதிக அளவில் எடுத்து வந்தால், அவை 85% ஓவுலேசன் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. எனவே அடுத்த முறை கலோரிகளை குறைத்து, ஓரளவு கொழுப்புள்ள பால் பொருட்களை அதிகம் சேர்த்து வாருங்கள்.

இனிப்புகள்

பண்டிகை காலங்கள் வந்தாலோ அல்லது ஹோட்டல் சென்றாலோ, இனிப்புக்களைப் பார்த்தால், கணக்கே இல்லாமல் அள்ளி சாப்பிடுவோம். அப்படி இனிப்புகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இன்சுலின் அளவை அதிகரித்து, அதனால் நீரிழிவு ஏற்படவும் வழிவகுக்கும். எனவே இனிப்புக்களை அளவாக சாப்பிட்டு, வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

Leave a Reply