2.4 கோடி பேர் ஹெபடைட்டிஸ் ‘பி’ கிருமி தொற்றுடன் வாழ்கிறார்கள். 7.8 லட்சம் பேர் இறக்கிறார்கள். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ கிருமிகளால் லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஹெபடைட்டிஸ் கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை குறிக்கும். இது ஒரு கட்டத்துக்குள் இருந்துவிடாமல் கல்லீரல் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படலாம். கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன.
இதன் வகைகள் ‘ஏ’யில் தொடங்கி ‘ஜி’ வரை சென்று விட்டது. இந்த வரிசையில் மிக மோசமானது ‘பி’ மற்றும் ‘சி’ தான் உலகில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட ‘பி’ ‘சி’ யே காரணமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் ரத்தம், சரியாக சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளை பயன்படுத்து வதாலும் பரவுகிறது. கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும், உடலுறவு மூலமும் பரவுகிறது.
அதனால் தான் கர்ப்பிணிகள் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பரிசோதனையில் பி அல்லது சி வைரஸ் இருப்பது தெரிய வந்தால் சிசுவுக்கு இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்ணும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றை தடுக்க, குழந்தை பிறந்ததும் ஹெபடைட்டிஸ் ‘பி’ தடுப்பூசி போட வேண்டும். இதை எல்லா வயதினரும் போட்டுக்கொள்ளலாம்.
பாதுகாப்பற்ற ரத்தம் பெறுதலை தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ வைரஸ் பரவாமல் இருக்க தனி நபர் சுகாதாரம் அவசியம். நோய் உள்ளவர்கள் உணவை சமைக்கும் போதோ, பரிமாறும் போதோ அது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே சுத்தம் மிக, மிக அவசியம்.