உள்ளாட்சி தேர்தல் திடீர் ரத்து. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தேர்தலில் , சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வில்லை என்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கவில்லை என்றும் எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி என்.கிருபாகரன் இவ்வழக்கின் தீர்ப்பை சற்று முன் அளித்தார்.
இந்த தீர்ப்பில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த நீதிபதி கிருபாகரன், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதிகளுக்கு பதிலாக டிசம்பர் 30 ந்தேதிக்குள் உள்ள்ளாட்சி தேர்தலை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தேர்தலுக்காக புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். எனவும் உத்தரவிட்டு உள்ளார்.