லண்டன் செஸ் கிளாசிக் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸை தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து டை பிரேக்கர் முறையில் போட்டியை வென்று சாம்பியன் ஆகியுள்ளார் ஆனந்த்.
லண்டனில் நடைபெற்ற லண்டன் செஸ் கிளாசிக் போட்டியின் 4-வது சுற்றின் முடிவில் அனிஷ் கிரி மற்றும் கிராம்னிக் ஆகியோர் 6 புள்ளிகளுடன் முன்னணியில் இருந்தார்கள். முதல் 4 சுற்றுகளையும் ஆனந்த் டிரா செய்ததால் இறுதிச்சுற்றில் வென்று சாம்பியன் ஆவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் போட்டியின் கடைசி நாளன்று நடந்த 5-வது மற்றும் இறுதிச்சுற்றில் கருப்பு நிறக் காய்களுடன் ஆடிய ஆனந்த், 36 நகர்த்தல்களில் இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஆடம்ஸை தோற்கடித்தார். கிரி-கிராம்னிக், கருணா-நாகமுரா ஆடிய மற்ற இரு ஆட்டங்களும் டிரா ஆயின. இறுதியில் ஆனந்த், கிராம்னிக், கிரி ஆகிய மூவரும் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். டை பிரேக்கர் முறைப் படி யார் கருப்பு நிறக் காய் களுடன் ஆடி அதிக வெற்றிகள் பெற்றவரோ அவருக்குத்தான் முதலிடம் கிடைக்கும். இந்தப் போட்டியில் ஆனந்தைத் தவிர மற்ற யாரும் கருப்பு நிறக் காய் களில் ஆடி வெற்றி பெறவில்லை. எனவே, லண்டன் செஸ் கிளாசிக் போட்டியின் சாம்பியனாக ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.