மத்திய அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு. லாரி வேலைநிறுத்தம் வாபஸ்

மத்திய அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு. லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
lorry
இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரி வேலை நிறுத்தம், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும் லாரிகள் கடந்த ஐந்து நாட்களாக ஓடவில்லை. இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து முடங்கியது. பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்ததால் நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர். தமிழகம் உள்பட உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இந்த வேலை நிறுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, லாரி அதிபர்களிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து 8 பேர் கொண்ட குழு அமைப்பது என்றும், அதில் லாரி உரிமையாளர்கள் தரப்பில் 4 பேர் இடம் பெறுவார்கள் என்றும், அந்த குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், டி.டி.எஸ். பிடித்தம் மற்றும் டீசல் மீதான சேவை வரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

நேற்று இரவு முதல் லாரிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply