தமிழக அரசியல்வாதிகளுக்கு லைகா கண்டனம். ‘2.0’ படத்திற்கு சிக்கல் வருமா?
‘2.0’ படத்தயாரிப்பு நிறுவனமான லைகா இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழதமிழர்களுக்காக தனது அறக்கட்டளை மூலம் 150 வீடுகள் கட்டியுள்ளது. இந்த வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இந்த விழாவிற்கு 2.0 படத்தின் தயாரிப்பாளரும் லைகா நிறுவனருமான சுபாஷ்கரன், ரஜினிக்கும் அழைப்பு விடுத்தார். ரஜினியும் இந்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல ஒப்புக்கொண்டார்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகளான டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, வேல்முருகன், ஆகியோர்கள் ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு செல்ல கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம் என லைகா நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து லைக்கா வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசியல்வாதிகளின் பொய்க்குற்றச்சாட்டை நம்பி, ரஜினியின் இலங்கைப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில்தான் வீடுகள் கட்டி வழங்க உள்ளோம். ரஜினியின் வருகையை ஒட்டி, மேலும் பல நலத்திட்டங்களை தொடங்கவும் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், வைகோ, திருமாவளவன் போன்றோர் ரஜினிகாந்துக்கு வீண் கெட்டப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக எந்த நலத் திட்டமும் செய்யாத வைகோ, திருமாவளவன் எங்களை குறைசொல்வது வேதனையாக உள்ளது.
ரஜினிக்கு தேவையற்ற தர்மசங்கடம் ஏற்படுத்தியுள்ளனர். எனினும், ஏப்ரல் 10 ம் தேதி, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் திட்டமிட்டபடி வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு லைகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.