தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு லைகா ஆதரவா?
தயாரிப்பாளர் சங்கத்துத்தின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவனம் தயாரித்த ‘காலா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிக டிஜிட்டல் கட்டண எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
எனவே, ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினியின் ‘காலா’, திட்டமிட்டபடி ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து ‘காலா’ படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான விஷால், கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஆதரவளிப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. “நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்திருக்கிறோம். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு முழுவதுமாக ஆதரவளிக்கிறோம். இந்த அமைப்பு சீரடையும்வரை, நாங்களும் அவர்களுடன் இணக்கமாக உள்ளோம்” என லைகா நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
எனவே, திட்டமிட்டபடி ஏப்ரல் 27 ஆம் தேதி ‘காலா’ ரிலீஸாவது சிக்கல் தான் என்கிறார்கள். காரணம், ஏற்கெனவே தணிக்கைச் சான்றிதழ் வாங்கிய படங்களுக்குத்தான் முன்னுரிமை என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதால், இன்னும் தணிக்கைக்கு அனுப்பப்படாத ‘காலா’ ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது
Lycal support producers council protest