கடந்த சில நாட்களாக கணவருடன் சேர்த்து வைக்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கவிஞர் தாமரை தனது வாழ்க்கைக்காகவும், தனது மகனின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கணவர் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல சினிமா பாடலாசிரியரும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளருமான கவிஞர் தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் கடந்த 27ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில், 8ஆம் நாளான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தன்னுடைய போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ”என் கணவர் தியாகு வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார். அவர் திரும்பி வர வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகவே வீதிக்கு வந்த போராடுகிறேன்.
தியாகுதான் எனது வீட்டிற்கு வந்து பெண் பார்த்து, என்னை திருமணம் செய்து கொண்டார். இப்போது என்னை நிர்கதியாக விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதற்காக காவல்துறை, நீதிமன்றம் என செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விவாகரத்துக்கும் சம்மதிக்க மாட்டேன். என் மகனின் எதிர்காலத்திற்காகவும், என் வாழ்க்கைக்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும்” என்றார்
முதலில் கணவர் தன்னோடு சேர்ந்து வாழவே போராட்டம் நடத்துவதாக கூறிய தாமரை, திடீரென ரூ.2 கோடி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.