இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி. மு.க.அழகிரியின் பேச்சால் திமுகவில் பரபரப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் மதுரையில் இருந்தே அரசியல் செய்து வரும் மு.க.அழகிரி, அவ்வப்போது ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிவந்தார். இந்நிலையில் நேற்று சென்னை வந்த மு.க.அழகிரி, விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து நான் எழுப்பிய குற்றச்சாட்டுகள், கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி கூற இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
வேறு ஏதேனும் கட்சியில் அவர் சேருவாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்பது குறித்துதான் மு.க.அழகிரி இன்னும் 2 மாதத்தில் கூற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு மு.க.அழகிரி காய் நகர்த்தி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருசில ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.