பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மத்திய முன்னாள் இணை அமைச்சர் நெப்போலியனின் முடிவுக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பில்லை. அவர் பாஜகவில் சேர நான் ஆசி வழங்கவில்லை என்று திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்..
திமுகவில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன், பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், மு.க.அழகிரியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் தொலைபேசியில் கேட்டதற்கு அவர் கூறியது:
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட பலர் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தினர். இப்போது திமுகவில் இருந்து விலகும் கட்சியினர் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரம் முன்னாள் எம்பி ஜே.கே.ரித்தீஷ் அதிமுகவில் சேரும்போதும் எனது பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
திமுக உள்கட்சி ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று தான் கூறினேன். யாரும் கட்சியை விட்டு விலக வேண்டும் என்று கூறவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்துப் பெற நெப்போலியன் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர் பாஜகவில் சேருவதற்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்றார் அழகிரி.