சட்டசபையில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டது ஏன்?
நேற்றைய சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்தால் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று திமுக எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழி பேசியபோது கைத்தறிதுறை அமைச்சர் குறுக்கிட்டு கூறிய ஒரு கருத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இந்த கருத்தை வலியுறுத்தினார்.
ஆனால் சபாநாயகர் சபைக்குறிப்பில் இருந்து அமைச்சரின் கருத்தை நீக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களை உட்காரும்படி ஸ்டாலின் கூறியும் அவர்கள் உட்காரவில்லை.
பின்னர் பேசிய ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களின் நடத்தைக்கு தான் வருந்துவதாகவும், தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், பின்னர் அமைச்சரின் கருத்தையும் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நேரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது கருத்தை வாபஸ் பெறுவதாக கூறிய பின்னர் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.