மதுரை மக்களிடம் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தது ஏன்? பரபரப்பு தகவல்

மதுரை மக்களிடம் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தது ஏன்? பரபரப்பு தகவல்
mk stalin
‘நமக்கு நாமே’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் தொடங்கி தற்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இந்த சுற்றுப்பயணத்தில் மக்களை நேரில் சந்தித்து வருவதோடு, கடந்த திமுக ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரை மாநகர் பகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் பின்னர் கோ.புதூர், ஜவஹர்புரம், பி.பீ.குளம், செல்லூர், நரிமேடு, அண்ணா நகர், தெப்பக்குளம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நமக்கு நாமே’ சுற்றுப் பயணத்தை நாடகம் என சிலர் விமர்சனம் செய்கின்றனர். மக்களின் பிரச்னைகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகத் தெரிந்து கொள்வதே இந்தப் பயணத்தின் நோக்கம். அதேநேரம், மக்களைச் சந்தித்து குறைகளை நேரடியாகக் கேட்கும் தைரியம் ஆளும் கட்சி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இல்லை. சுற்றுப் பயணத்துக்கு ஏராளமான இடையூறு செய்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம்.

மாணவர்கள் அரசியலில் ஈடுபட தேவையில்லை. ஆனால், அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர் சக்திதான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். திமுக முதல் முதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம். வரும் காலங்களில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. குறிப்பாக, தொழில் துறையினர் இப்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அனுமதி, சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் இளைஞர்கள் விரும்புகின்றனர்.

முந்தைய ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு திமுக துணை நிற்கும். ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கும். திமுக ஆட்சி அமைந்தால், நெசவாளர்களுக்கென சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும். புதிய வடிவமைப்புகளில் ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Leave a Reply