கவர்னருடன் மு.க,.ஸ்டாலின் திடீர் சந்திப்பு:
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தவும் இந்த விவகாரத்தில் கவர்னர் நேரில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார். மேலும் ஸ்டாலின் கொடுத்த அந்த மனுவில் 8 கட்சி தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.
கவர்னரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு அதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
மத்திய அரசின் போக்கால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இது பற்றி நாங்கள் இன்று கவர்னரிடம் தெளிவாக எடுத்து கூறினோம்.
மே மாதம் 3-ந்தேதிக்குள் காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதுவரை மத்திய அரசு காத்திருக்கக்கூடாது. அதற்கு முன்னதாக வரைவு திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்காக பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் சார்பில் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு கவர்னர் ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக தமிழ்நாட்டில் இருந்து விவசாயி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை.
இது தொடர்பாக எந்த கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று பொன். ராதாகிருஷ்ணனே கூறி விட்டார். இதுநாள் வரை பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச முடியவில்லை.
எனவே பிரதமரை சந்திக்க நீங்கள் (கவர்னர்) ஏற்பாடு செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தோம். கவர்னரும் பிரதமரை சந்திப்பதற்கு தேதி வாங்கி தருவதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படாத அரசு உள்ளது. இதுபற்றியும் கவர்னரிடம் எடுத்து கூறினோம். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம்.
இன்னும் 2, 3 நாட்களில் மீண்டும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி பேச உள்ளோம். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இது நாடகமாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.