89க்கு 2 தானா? சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

89க்கு 2 தானா? சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

stalinநடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் நேற்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் இருப்பதால் சட்டமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையி இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுமே சபாநாயகர் பேச அனுமதி கொடுத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றைய சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது. அவை ஒத்திவைப்புக்குப் பின்னர் சபாநாயகரிடம் திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

சட்டப்பேரவையில் திமுக சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் கூறியிருக்கிறார். இது 89 உறுப்பினர்களைக் கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு அரங்கேற்றப்படும் செயல். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மூன்று பேர் பேச அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

திமுக தலைவர் கருணாநிதி பேரவைக்குள் வந்து செல்லக் கூடிய வகையில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என பேரவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்தோம். ஆனால், கருணாநிதி வந்து செல்ல வசதியான இருக்கை வசதி செய்யப்படவில்லை.

முன்னாள் அமைச்சர்கள், ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட பிறகு புதியவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படுவது சட்டப்பேரவை மரபாக உள்ளது. ஆனால், இந்த மரபுகள் எதையும் கணக்கில் கொள்ளாமல் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு வீல் சேர் வந்து செல்ல முடியாது. எனவே, கருணாநிதி பேரவைக்குள் வந்து செல்லக் கூடிய வகையில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வழக்கமாக ஆளுநர் உரை மீது முதல்வர் பதிலுரை அளித்த பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை அந்த மரபை மாற்றி முதல்வர் பதிலுரை அளிப்பதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார் என அலுவல் ஆய்வுக் குழு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சித் தலைவரை அவமதிக்கும் செயலாகும். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பல்வேறு கோரிக்கைகளை சபாநாயகரிடம் முன்வைத்துள்ளோம். அதை பரிசீலிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது அடுத்த கூட்டம்கூட. அதற்குள் எங்கள் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் கட்சித் தலைவருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.”

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply