சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதாவுக்கு மாற்றாக முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேலியும் கிண்டலுமாக நேற்று கோவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின் ”கோவையில் இன்று 9வது முறையாக இலவச திருமண நிகழ்ச்சி தி.மு.க.வால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 730 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், 27 ஜோடிகள் கலப்பு திருமணம் செய்தவர்கள்.
நான், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினேன். அதில் பல கேள்விகளை கேட்டிருந்தேன். செய்தியாளர்கள் மூலமாக மட்டுமில்லாமல், பதிவு தபாலிலும் அந்த கடிதத்தை பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி இருந்தேன். ஆனால், அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. அவர் பதிலளிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், அந்த கேள்விகளெல்லாம் தமிழக முதல்வரை நோக்கி கேட்கப்பட்டவை. அந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தால் அவர் முதல்வர் என்றாகிவிடும். அதனால், அவர் பதிலளிக்க மாட்டார்.
தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றது முதல் இன்று வரை முதல்வர் அறைக்கு சென்று, முதல்வர் நாற்காலியில் அமரவில்லை. அவரது அலுவலகம், இல்லத்தில் கூட இன்னும் தமிழக நிதி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற பெயர் பலகை தான் அமைக்கப்பட்டுள்ளது. தன்னை ஒரு முதல்வராக கூட அறிவித்துக்கொள்ளாதவராக பன்னீர்செல்வம் இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓ.பி. என சொல்லலாம். அரசு மருத்துவமனையில் ஓ.பி. என்றால் அவுட் பேஷன்ட் என்பார்கள். அதாவது வெளிநோயாளிகள். அவர்கள் வெளியில் சிகிச்சை பெற்று சென்றுவிட வேண்டும். உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல், முதல்வர் அறையினுள்ளே செல்லாமலேயே முதல்வராக இருக்கிறார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டை மட்டுமல்லாது, போயஸ் கார்டன், கொடநாடு என மூன்று இடங்களில் முதல்வர் அலுவலகம் இயங்கியது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஒரு இடத்தில் கூட அலுவலகம் இல்லாத நிலை உள்ளது.
அரசு இயந்திரம் செயல்பாடு இல்லாமல் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தின் முதல்வர் யார் என சொல்ல முடியாத மோசமான நிலை தான் தமிழகத்தில் உள்ளது. ஒரு திரைப்படத்தில் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்…னு திரும்ப திரும்ப ஒருத்தர் சொல்லி கொண்டே இருப்பார். அது மாதிரி மக்கள் எல்லோரும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. தமிழகத்தின் முதல்வர் யார் என்பது தான் அந்த கேள்வி.
தொழில் முனைவோர் மாநாட்டை ஒத்தி வைத்தது ஏன் என நான் கேள்வி கேட்டால், அரசியலாக்குறார் என என் மீது அமைச்சர் குற்றம்சாட்டுகிறார். கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை கூட தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தாத தமிழக அரசு, இந்த முறை தேதி அறிவித்துவிட்டு, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்காக ஒத்தி வைத்துள்ளனர். இது அரசியலா? அல்லது நான் ஏன் நடத்தவில்லை என்று கேட்பது அரசியலா?.
அ.தி.மு.க. அரசின் இறுதியாண்டு இது தான். இது போன்ற மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். அதற்கு தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். கடந்த கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை கருத்தில் கொண்டு வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.