ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி. மு.க.ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக திமுகவினர் பேனர் வைத்து மு.க.ஸ்டாலினை வரவேற்கின்றனர். ஆனால் திமுகவின் பேனர்களை சுற்றி அதிமுகவினர் ‘நமக்கு நாமே’ பயணத்தை கேலியும் கிண்டலும் செய்து பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர்களில் முதல்வர் ஜெயலலிதா சிரித்த முகத்துடன் தன்னை வரவேற்பதாகவும், அதற்கு தன்னுடைய கோடானு கோடி நன்றியை அவருக்கு தெரிவித்து கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் ஜெயம்கொண்டானில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது: என்னுடைய ‘நமக்கு நாமே’ பயணத்திற்கு பேனர் வைத்தால், அதுக்கு பக்கத்துல அ.தி.மு.க.வினர் பத்து பேனர்களை வைக்கின்றனர். சுற்றி அம்மா பேனர்தான். அம்மா என்னை வரவேற்கிறாங்க, பாருங்க. எனவே, தோழர்களை அன்போடு கேட்டுக்கிறேன், இனி எனக்கு தி.மு.க.வினர் பேனர் வைக்க வேண்டாம். அ.தி.மு.க.வினரே பேனர் வைத்துவிடுவார்கள்.
முதல்வர் எவ்வளவு சிரித்த முகத்துடன் வரவேற்கிறாங்க பாருங்க. எதற்கு நமக்கு செலவு. இங்கு பேனர் வைத்துள்ள மாவட்டச் செயலாளர் முதல், கிளைச் செயலாளார் வரை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கின்றேன்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க திட்டியுள்ளது. ஆனால், அந்த திட்டங்களை வேண்டுமென்றே அ.தி.மு.க முடக்கியுள்ளது. பெரம்பலூரில் 3000 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக் கல்லூரி என்று பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மின்சாரத்துறை அமைச்சர் சட்டசபையில், ‘வானத்தில் வேண்டுமானால் பவர் கட்டாகும்; பூமியில் கட்டாகாது’ என கூறுகிறார். இவர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்ட முடியும். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.
இந்த மோசமான ஆட்சி மீண்டும் தொடரவேண்டுமா… சொல்லுங்கள்! வருகிற 2016 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தூக்கி எறியத் தயாராகுங்கள்” என்றார்.