மதுரையின் சித்திரைத்திருவிழா. ஒரு சிறப்புப்பார்வை

p16a   உங்கள் வீட்டில், மதுரையா, சிதம்பரமா?’ என்று அநேக மாக எல்லோருமே தமாஷாகக் கேட்டிருப்போம். அந்தக் காலம் தொடங்கி இன்றளவும் மதுரை, மீனாட்சியம்மையின் ஆளுகைக்கும் அருளுக்கும் உட்பட்டே இருந்து வருகிறது.

மதுரையில் வருடம் முழுவதும் எத்தனையோ விழாக்கள் உண்டு

என்றாலும், சித்திரைத் திரு விழாவுக்கு இணையானதொரு பிரமாண்டமான விழா, மதுரையில் மட்டுமல்ல… தமிழகத்திலேயே வேறு எதுவும் இல்லை எனலாம்.

சித்திரைத் திருவிழாவின்போது, உலகில் எங்கெல்லாம் மதுரைக் காரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும் இங்கே ஆஜராகிவிடுவார்கள். ‘அண்ணே… நல்லா இருக்கீயளா? போன தடவை அழகர் ஆத்துல இறங்கும்போது பார்த்தது! ஆத்தா எப்படி இருக்கு?’ போன்ற நல விசாரிப்புகள், திருவிழா வின்போது மதுரை முழுவதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.

மதுரைக்கு நான்மாடக்கூடல் உள்ளிட்ட இன்னும் பல பெயர்கள் உண்டு. 1622-ம் வருடத்திய ஓலைக் குறிப்பு ஒன்றில், ‘ஸ்ரீதலம்’ என்று மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மீனாட்சியம்மைக்கான பட்டாபிஷேக விழாவையும், கையில் செங்கோலுடன்

p16d(1)மகாராணி மாதிரி அவள் காட்சி தருவதையும், அதையெல்லாம் திருமலை நாயக்க மன்னர் நேரில் வந்து, தரிசித்து மகிழ்ந்த தகவல் களையும் ஓலைச்சுவடிக் குறிப்பு களும் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடப்பதும், அப்போது மன்னர் மகாராணியுடன் வந்து தரிசனம் செய்வதும் மரபாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் பட்டா பிஷேகத்தின்போது செங்கோலுடன் காட்சி தரும் தேவியை கண்ணாரத் தரிசிக்கலாம். மதுரை திருக்கோயிலில், மீனாட்சியம்மையின் சந்நிதிக்கு முன்னே, மண்டப விதானத்தில், அம்பிகையின் உத்ஸவத் திருமேனி சர்வ அலங்காரத்தில் செங்கோலுடன் இருக்க, அருகில் கைகூப்பி வணங்குகிற ராணிமங்கம்மாளின் ஓவியம் அந்தக் காலத்தில் வரையப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில், அந்த ஓவியம் பாதுகாக்கப்படாமல் போய் விட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

p16iசித்திரை மாதம் துவங்கியதுமே, மதுரையில் மெள்ள மெள்ள திருவிழா களை கட்டத் தொடங்கிவிடும். திருவிழாவின் 10-ம் நாள் திருக்கல்யாணம். 9-ம் நாளில் மீனாட்சி திக் விஜயம் நடைபெறும். அப்போது, இந்திர விமானத்தில் வரும் மீனாட்சியம்மையைப் பார்ப்பவர்கள் பரவசமாகிப் போவார்கள். சிலர் தங்கள் வீட்டுப் பெண் அலங்காரத்துடன் வருவதாக நினைத்து மகிழ்வார்கள். இன்னும் சிலர், தங்கள் தேசத்தின் மகாராணி என்று வணங்கி ஆனந்தப்படுவார்கள். சிவனடியார்கள் பலரும் நம் வீட்டு மருமகள் என்றே கொண்டாடுவார்கள். சொல்லப் போனால், ‘இது கோயில் விழாவா, குடும்ப விழாவா’ என்று குழம்பும் அளவுக்கு மக்கள் மனத்தில் இரண்டறக் கலந்துவிட்ட சித்திரைத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்ற வைபவம் என்பதில் சந்தேகமே இல்லை.

”திட்டமிட்ட நகரமயமாக்கம், நகரத்தை உருவாக்குதல் என்றெல்லாம் இப்போது சொல்கிறோம். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே, மதுரை மாநகரம் திட்டமிட்ட நகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகக் கோயில்களில், மிகவும் புராதனமான, தொன்மையான, பழைமையான கோயில் ஸ்ரீமீனாட்சி அம்பாள் கோயில்தான். மதுரைக் காஞ்சி எனும் சங்க இலக்கிய நூல், கோயிலின் பிரமாண்டத்தையும்,

சுந்தர பாண்டிய மன்னர் காலத்தில் கிழக்கு கோபுரம் கட்டப்பட்டதையும், கோயிலின் பெருமைகளையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது. பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருந்தாலும் திருமலை நாயக்க மன்னரின் கைக்கு மதுரை வந்த பிறகுதான், கோயில் விரிவுபடுத்தப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டுள்ளது என்று, ‘மதுரை திருப்பணி மாலை’ எனும் தலைப்பிலான ஓலைச்சுவடி தெரிவிக்கிறது” என்கிறார் சரித்திர ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

மதுரையம்பதி, மதுராபுரி, கூடல் மாநகரம் என்றெல்லாம் மதுரைக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. அதேபோல, ஆலவாய் நாதர் கோயில், ஆலவாய் சொக்கனார் கோயில், அங்கயற்கண்ணி கோயில் என ஸ்ரீமீனாட்சியம்மை ஆலயம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  

”நினைத்தால் முக்தி என்று திருவண்ணாமலையையும், பிறந்தால் முக்தி என்று திருவாரூரையும் சொல்கிறோம். அதேபோல், ‘மதுரை’ என்று சொன்னாலே போதும், முக்தி நிச்சயம்! வாழும்போதே, அதற்கான பலன் உண்டு. சிவனாரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த பூமி இது. அவரின் விளையாடல்கள் மொத்தமும் அரங்கேறிய தேசம் இது. அவ்வளவு ஏன்… சிவனாரே தன் சிரசில் இந்த மண்ணை எடுத்து வைத்திருக்கிறார் அல்லவா! அதாவது, பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நாம் அறிவோம்தானே! அப்படி யெனில் இதைவிட புண்ணிய பூமி என்று வேறு எதைச் சொல்லமுடியும்?

க்ஷேத்திரம் ஹாலாஸ்யம் சதுர்ஸம் தீர்த்தம் ஹேமாப்சி நீஷமம்
லிங்கம் சுந்தரேச துல்யம் நாஸ்தி ஜகத் ப்ரயே. ‘ஹாலாஸ்யம்’

என்று அழைக்கப்படுகிற மதுரைக்கு நிகரான தலமும், பொற்றாமரைக்கு நிகரான தீர்த்தமும், ஸ்ரீசுந்தரேச பெருமானுக்கு நிகரான மூர்த்தமும் மூவுலகிலும் இல்லை என்று ‘ஆலாஸ்ய மாகாத்மியம்’ எனும் நூல் விவரிக்கிறது. மூர்த்தி, சுயம்பு. பொற்றாமரை தீர்த்தக் குளம், சிவனாரே உண்டாக்கிக் கொண் டது. தனக்காக, தான் பூமியில் வசிப்பதற்காக, அவரே விருப்பப்பட்டு நகரத்தை உருவாக்குகிறார். அதுவே மதுராபுரி என்கிற இந்த மதுரை மாநகரம் என்கிறது ஸ்தல புராணம்” என்று பெருமையுடன் சொல்கிறார் மீனாட்சி கோயிலின் பரம்பரை ஸ்தானீகர் செந்தில் பட்டர்.

”சம்போஸ்து லீலாஸ்த நத்வாது க்ஷேத்திர மேதத் பராபரம்.
யதான சந்தி க்ஷேத்ரானி புண்யானி புவனே சுச
ஸ்ரீஹாலாஸ்யம் சிவேனநவ
விகர்த்தும் நிர்மிதம் புரா.
தஸ்மாது க்ஷேத்திர மாகாத்மியம்
ஜானா தேவ மகேஸ்வர:

அதாவது, சிவனார் தனது லீலைகளை இங்கே அருளிச் செய்ததாலும், உலகில் க்ஷேத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே, தான் வசிப்பதற்காக சிவனார் இந்தத் தலத்தை உண்டு பண்ணியதாலும், இந்தத் தலத்தின் பெருமை முழுவதையும் சிவனார் மட்டுமே அறிய முடியும் என்று வியந்து சொல்கிறார் அகத்தியர் பெருமான். மகேசனின் சடையில் உள்ள சந்திரனில் இருந்து அமிர்த தாரை  இங்கு வழிந்ததால், மதுராபுரி என்று அழைக்கப்படுகிறது என்கிறார் இவர்.

p16kஅடியவர்களுக்கு மட்டுமின்றி நாரை, பன்றி, கருங்குருவி எனப் பல உயிர்களுக்கும் ஈசன் அருளிய க்ஷேத்திரம் இது. ஒரு குடும்பத்துக்குத் தலைவன் என்று ஆண்மகன் இருந்தாலும், பெண்ணின் ஆளுமைக்கு உட்பட்ட இல்லமே சிறந்து விளங்கும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், ஈசன் தன்னை தாழ்த்தி, அம்பிகையை உயர்த்தி, உமையவளை மலையத்துவஜ மன்னனுக்கு மகளாக, மீனாட்சியாகப் பிறக்கச் செய்து, அவளை மணம் புரிவதற்காக மதுரைக்கு வருகிறார். இதையே மீனாட்சி திருக்கல்யாணம் என்றும், சித்திரைத் திரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள் மதுரை மக்கள். 12 மாதத் திருவிழாக்களில், இதுவே தலையாய விழா! இந்த நாளில், சிவ-பார்வதி திருமணத்தைத் தரிசிக்க, திருக் கயிலாயத்தில் இருந்தும் இந்திரலோகத்தில் இருந்தும் அனைவரும் இங்கு வருகிறார்கள் என்பது ஐதீகம்!

”சித்திரைத் திருவிழா என்பது இன்றைக்கு உலகப் பிரசித்தியாகிவிட்டது. ஆனால், இந்த விழா, ஒருகாலத்தில் மாசி மாதத்தில்தான் நடைபெற்றுள்ளது. பட்டாபி ஷேகம், திருக்கல்யாணம், திருவீதியுலா, திக்விஜயம், தேரோட்டம் என அனைத்துமே மாசி மாதத்தில்தான் நடந்திருக்கிறது. எனவேதான் இங்கே வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி என தெருப்பெயர்களில் மாசி இணைந்திருக்கிறது.

ஒருமுறை, ‘என்ன… தேரோட்டத் துக்கு கூட்டத்தையே காணோம். தேர்க்கூட்டம், திருவிழாக்கூட்டம் என்பார்கள். ஆனால், தேர் இழுக்கக்கூட ஆட்கள் குறைவாக இருக்கிறார்களே!’ என்று வேதனையுடன் கேட்டாராம் திருமலை நாயக்க மன்னர். தை மாதமும் மாசி மாதமும் அறுவடையெல்லாம் முடிந்து, விளைந்ததை விற்பனை செய்யும் காலம். எனவே, விற்று முடித்து காசாக்கிக்கொண்டு வரும் முனைப்பில் மக்கள் இருப்பதால், பலரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று மந்திரிகளும் மக்களும் அந்தணர் களும் தெரிவித்தார்கள். அதையடுத்து, ‘மாசியில் நடைபெறும் இந்த விழா வானது, அடுத்த வருடத்தில் இருந்து சித்திரையில் நடைபெறட்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார் திருமலை நாயக்கர். ”அதுமட்டுமா? சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் வகையில், மீனாட்சியம்மையின் திருக் கல்யாண வைபவத்தையும் அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்தையும் ஒன்றாக்கி, ஒரே விழாவாக, சித்திரைப் பெரு விழாவாக நடத்தினார் திருமலை நாயக்கர்” என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

மதுரை சித்திரைத் திருவிழா, சாதி பேதங்களை உடைத்தெறிகிற விழா! உணவுப் பண்டங்கள் தயாரிப்பவர்களும், பாண்டங்கள் செய்பவர்களும், உடைகள் தயாரித்து விற்பவர்களும், இனிப்பு வகைகள் செய்பவர்களும், கலைஞர்களும்  என அனைவருக்குமே இந்தச் சித்திரைத் திருவிழா லாபத்தைத் தருகிறது. பெயரையும் புகழையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

முக்கியமாக, உறவுக்காரர்களைச் சந்திப்பதும், ‘எங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள்’ என்பதை அறிவிக்கவும் இந்த சித்திரைத் திருவிழா பெரிதும் உதவி செய்தது. கருத்து வேற்றுமையால் பிரிந்த உறவுகளும் தோழமைகளும்கூட, அழகருக்கு முன்னே, மீனாட்சியம்மையின் திருவுருவத்துக்கு முன்பாக, ‘இனி ஒருபோதும் பிரியமாட்டோம்’ என்று உறுதியேற்று, இணைந்துகொள்வார்களாம்.

”உண்மைதான்! மதுரைலேருந்து 24 கி.மீ. தொலைவுல இருக்கிற சோழவந்தான் கிராமம்தான் எனக்குப் பூர்வீகம். மதுரை சித்திரை விழாவுக்கு வர்றதுன்னா, எங்களுக்கெல்லாம் லண்டன், அமெரிக்கா போறது மாதிரி. ஊர் நாட்டுல, தண்ணி தெளிச்சு விட்டுட்டாய்ங்கன்னு சொல்வாங்களே… அதுமாதிரி, மதுரை சித்திரைத் திருவிழான்னா, ‘ஐயய்யோ… புள்ளையக் காணோமே’னு யாரும் தேடமாட்டாங்க. திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூஸியம், சினிமா, ஓட்டல் சாப்பாடுன்னு ஒரே கொண்டாட்டம்தான்!

தமுக்கம் மைதானத்துல பொருட்காட்சி துவங்கிடும். இன்னொரு ஏரியாவுல ஜெமினி சர்க்கஸ், ஓரியண்ட் சர்க்கஸ்னு போட்டிருப்பாங்க. பொருட்காட்சில அந்த ராட்சச ராட்டினத்தை ஹானு பாத்துப் பிரமிச்சுப் போயிருவோம். அப்புறம்… அந்த பீமபுஷ்டி அல்வா! எந்தப் பட்டாகத்தியாலயும் அணு குண்டாலயும் வெட்டவோ துளைக்கவோ முடியாத அதி பயங்கர, இனிப்பு அல்வா அது.

அந்த அல்வாவை பத்துப் பைசாவுக்கு வாங்கி வாய்ல போட்டுகிட்டாப் போதும்… இன்றைய சூயிங்கம் மிட்டாய்லாம் கிட்டக்கூட வரமுடியாது. எப்படியும் ரெண்டு மணி நேரத்துக்கு வாய்லயே கிடந்து, இனிப்பு ஊறிக்கிட்டே இருக்கும். அதேபோல, சீவல் ஐஸ். சீவுன ஐஸ்ல, 12 பாட்டில்கள்லேருந்து கலர்கலரா ஊத்திக் கொடுப்பாங்க. தேசியக் கொடி கலர் ஐஸ்தான், எங்க ஃபேவரைட்!” என்று இனிக்க இனிக்க, திருவிழா குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் ஞானசம்பந்தன்.

”தலத்துக்கு வந்து, இந்த மண்ணில் நம் பாதம் பட நிற்பதே புண்ணியம். மூர்த்தமான சிவனாரின் திருமேனியைத் தரிசிப்பது அதைவிட புண்ணியம். ‘சிவானந்தமாகிய பேரின்பக் கடலில், ஆன்மா திளைப்பதையே பக்தி என்றும், முக்தி என்றும் சொல்கிறோம். அதில் பொங்கித் ததும்பி, பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்கும் ஆத்மாவைத் தூய்மைப்படுத்தி, நாம் நினைக்காமலேயே நமக்குப் பிறவா வரத்தை வழங்குவதே தீர்த்தவாரியின் தாத்பர்யம். இதனை மகா ருத்ரபாத தீர்த்தம் என்பார்கள். திருக்கல்யாணமாகட்டும், திருத்தேரோட்டமாகட்டும், தீர்த்தவாரியாகட்டும்…. இதில் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்களோ, அவர்களுக்கு மோட்சம் நிச்சயம்!” என்கிறார் செந்தில் பட்டர்.

மதுரை மீனாட்சியம்மனின் கோயிலில், 12 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது சித்திரைத் திருவிழா. வைகாசியில் (விசாகம்) வசந்த உத்ஸவம், ஆனியில் உத்திரத் திருவிழா, ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் பௌர்ணமி, ஐப்பசியில் சஷ்டி திதி, கார்த்திகை யில் திருக்கார்த்திகை, மார்கழியில் பௌர்ணமி திதி, தை மாதத்தில் பூசம், மாசியில் மகம் என விழாக்கள் நடந்தாலும் மன்னருக்கும் மக்களுக்கும் மட்டுமின்றி, அந்த மகேசனுக்கே பிடித்த ஒப்பற்ற விழா இந்த சித்திரைத் திருவிழா!

”கொடியேற்றத்துடன் விழா துவங்கும். ரிஷபக் கொடி உச்சியில் பறக்கும். ஜீவாத்மாவாகிய நம்மை பரமாத்மாவாகிய இறைவன், கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர்த்துவதற்குத் தயாராக இருக்கிறார் என்பதை, இந்தக் கொடியேற்றம் உணர்த்துகிறது.

அன்றைக்குக் கற்பக விருட்ச வாகனத்தில் சிவனாரும், சிம்ம வாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவார்கள். பஞ்சமூர்த்தி புறப்பாடாக, நான்கு மாசி வீதிகளிலும் வருகிற ஸ்வாமியையும் அம்பாளையும் பார்த்தாலே போதும்… நம் சந்ததி, கற்பகத் தருவெனச் செழித்துவிடும்.

2-ம் நாள் காலையில், தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில், ஈசன் பூத வாகனத்திலும், அன்னவாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவார்கள். இதைத் தரிசித்தால், ஒரு தேசத்தின் நெற்களஞ்சியம், எப்போதும் நிறைந்திருக்கும். குறிப்பாக, உணவுப் பஞ்சமே இருக்காது.

3-ம் நாள் காலையில், தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில், திருக்கயிலாய பர்வத வாகனத்தில் (ராவணேஸ்வர வாகனம்) ஸ்வாமி யும், காமதேனு வாகனத்தில் உமையவளும் திருவீதியுலா வருவார்கள். இதைத் தரிசித்தால், எம பயம் விலகும்; தீய சக்திகள் அழியும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

4-ம் நாள், காலையிலும் மாலையிலும் தங்கப் பல்லக்கு வாகனம். இந்த நாளில், நான்கு வீதிகளைக் கடந்து, எல்லை கடந்து, பாகற்காய் மண்டபத்தில் தரிசனம். ஒருகாலத்தில், பாகற்காய் வியாபாரிகள் நன்றாக விளைச்சல் நடந்து, லாபம் கொழித்து, இங்கு மண்டகப்படி செய்து, நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள். அந்த மரபில், இப்போதும் வியாபாரிகள் பலரும் இணைந்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகிறார்கள்.

5-ம் நாள், காலையில் தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில் ஸ்வாமியும் அம்பாளும் தங்கக் குதிரையில் வீதியுலா வருவார்கள். இந்தத் தங்கக் குதிரை, மிகப் பிரமாண்டமானது. இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி, கண்களை உருட்டியபடி, தாவி வருகிற  குதிரையை அருகில் இருந்து பார்த்தால், பயந்தே விடுவோம். அத்தனைத் தத்ரூபமாக இருக்கும், தங்கக் குதிரை!

6-ம் நாள், காலையில் வழக்கம்போல தங்கச் சப்பரத்தில் வீதியுலா! மாலையில் தங்க ரிஷபத்தில் ஸ்வாமியும், வெள்ளி ரிஷபத்தில் அம்பாளுமாக வீதியுலா வருவார்கள். அப்போது, ஞானசம்பந்தர் வெப்பு நோய் தீர்த்தல், சமணர் கழுவேற்றுதல் ஆகியவை ஓதுவாரால் பாடப்படும்.

7-ம் நாள், பிட்சாண்டவர் புறப்பாடு! ரிஷி பத்தினிகளின் ஆணவத்தைப் போக்கும் வைபவம். இதைத் தரிசித்தால், நம்மிடம் உள்ள கர்வம், பொறாமை, ஆணவம், அலட்டல் யாவும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மாலையில் நந்தி வாகனத்தில் சிவனாரும், யாளி வாகனத்தில் அம்பிகையும் வீதியுலா வருவார்கள்.

8-ம் நாள், ஊடல் உத்ஸவம். இந்த நாளில், கோயிலின் பிராகாரத்தில் ஸ்ரீநடராஜரின் புறப்பாடு விசேஷமாக நடைபெறும். ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில், பல்லக் கில் உலா வருவார் சிவனார். அன்றைய மாலை வேளையில், வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்வாமி, அம்பாள் புறப்பாடு இருக்கும். மதுரையை மட்டுமின்றி, உலகையே ஆளும் பட்டத்தரசியான ஸ்ரீமீனாட்சி அம்பாளுக்கு பட்டாபிஷேக வைபவம். சிரசில் ராஜகிரீடம், திருக்கரத்தில் செங்கோல், கண்களில் பேரொளி, உதட்டில் புன்னகை எனக் காட்சி தரும் தேவியையும், அருகில் அத்தனையையும் ஏற்றுக்கொண்டு, அம்பிகையை மணம் புரியும் பூரிப்பில் இருக்கிற ஸ்ரீசொக்கநாதரையும் கண்டு, நாம் சொக்கிப் போவோம். காலை, மாலை இரண்டு விழாக்களையும் எவர் தரிசிக்கிறார்களோ, அவர்கள் தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வார்கள், இல்லறம் செழிக்க வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

9-ம் நாள், மரச் சப்பரத்தில் வீதியுலா! மாலையில், பட்டமகிஷி மீனாட்சியம்மை, இந்திர விமானத் தேரில் திக்விஜயப் புறப்பாடு. கையில் செங்கோல் ஏந்தி, எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டதிக் பாலகர்களை வென்று, ஈசானத்தையும் ஜெயித்து, கயிலாயத்தில் அதிகார நந்தியையும் தோற்கடித்த நன்னாள். அப்போதுதான் மீனாட்சிக்கு, தான் சிவனாரின் மனைவி என்பதே தெரியவரும். சிவனாரின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!

10-ம் நாள், ஸ்வாமி- அம்பாள் திருக்கல்யாணம். பட்டினப் பிரவேசம் எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு, மாலையில் பூப்பல்லக்கில் அம்பாளும், யானை வாகனத்தில் ஸ்வாமியும் வீதியுலா வருவார்கள். ”திருக்கல்யாண வைபவத்தைத் தரிசனம் செய்தால், திருமண தோஷங்கள் அகலும்; தடைகள் யாவும் நீங்கும்; நல்ல அன்பான கணவனை பெண்களும், பண்பான மனைவியை ஆண்களும் அடைவார்கள். கணவனும் மனைவியும் சமமே என்பதை உலகுக்கு அர்த்தநாரீஸ்வரராக உணர்த்திய சிவனார், மதுரையை அரசாளும் மீனாட்சியைக் கொண்டு அதை இன்னும் வலுப்படுத்திச் சொல்கிறார்” என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் செந்தில் பட்டர்.

திருக்கல்யாண வைபவத்தின்போது, இந்திர லோகத்தையே மிஞ்சிவிடும் அழகில் ஜொலிக்கும் இந்தத் தூங்கா நகரம். நம் தேசத்து ராணியை சிவபெருமானே திருமணம் செய்துகொள்ள வரப் போகிறார் என்று நெக்குருகிப் போகிற மக்கள், எங்கு பார்த்தாலும் வாழையால் தோரணம் கட்டியிருப்பார்கள். சந்தனத்தால் வாசல் மெழுகி, வாசம் பரப்பியிருப்பார்கள். பன்னீரைக் கொண்டு, வாசல் தெளித்து, வாசனாதி திரவியங்களையும் தீப தூபங்களையும் ஏற்றி, மொத்த மதுரையம்பதியையே மணக்கச் செய்திருப்பார்கள். ‘என்னதான் இருந்தாலும் உன்னை மணந்துகொள்கிறவன் சுடுகாட்டுச் சித்தனாயிற்றே! வாசனாதி திரவியங்களுக்குப் பதிலாக சாம்பலைப் பூசிக் கொள்பவன்; இடுப்பில் பட்டாடைகளுக்குப் பதிலாக புலித்தோலையும், கழுத்தில் பொன் ஆபரணங்களுக்குப் பதிலாக பாம்பையும் அணிந்திருப்பவனாயிற்றே!’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் மீனாட்சியம்மையின் காதில் தோழிகள் கிசுகிசுக்க… ‘இருக்கட்டுமே! ஆனாலும், அவர்தான் எனக்குச் சுந்தரன்; அவரே பேரழகன்’ என்பாளாம் அம்மை.

அதற்கேற்ப, தோழிகள் சொன்னதையெல்லாம் பொய்யாக்கும் வகையில், தங்க ஆபரணங்களும் பட்டு வஸ்திரங்களுமாக, தேஜ ஸ்வரூபியாக, ஆயிரம் கோடி சூரிய- சந்திரப் பிரகாசங்களுடன் கம்பீரமாகவும் பேரழகுடன் வருவாராம் ஸ்ரீசுந்தரேஸ்வரர். அதைக் கண்டு தோழிகள் உட்பட எல்லோரும் சொக்கிப் போய், மெய்ம்மறந்து, வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்களாம்.

மதுரையின் எல்லைக்குள் ஸ்வாமி வந்ததும், தங்கத் தாம்பாளத்தில் பாதங்களை வைத்து, காமதேனுவின் பாலைக் கொண்டு பாத பூஜை செய்யப்பட்டது என்றும், கொன்றை மலர்களை சிவனாரின் சிரசில் சூட்டி அழகுபார்த்தார்கள் என்றும், கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து வரவேற்றார்கள் என்றும், ஸ்ரீபிரம்மா யாகம் நடத்த, ஸ்ரீமகாவிஷ்ணு தாரை வார்த்துக் கொடுக்க, மதுரை எனும் புண்ணிய பூமியில் சிவ-பார்வதி திருமணம் இனிதே நடந்தேறியது என விவரிக்கின்றன சங்க இலக்கியங்கள்.

”மதுரை, மீனாட்சி, அழகர், திருவிழா இவை பிரித்துப் பார்க்கவே முடியாத விஷயங்கள். மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்ட விழாக்கள். திருமலை நாயக்கர், மதுரை மண்ணுக்கு வழங்கிய கொடைகளில் இந்த சித்திரைத் திருவிழாவும் ஒன்று.  அந்தக் காலத்தில், மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சித்திரையில்தான் புதுக்கணக்கு எழுதுவார்கள். ஒருபக்கம் விவசாயிகள் அறுவடை செய்து, விளைந்த பொருட்களை விற்றுக் காசு வைத்திருப்பார்கள். அடுத்து விதைப்பதற்குத் தயாராக இருப்பார்கள். அதேபோல், பண்ணையார்களிடம் வேலை பார்ப்பவர்கள், சித்திரையின் துவக்கத்தில் கணக்கு முடித்து, புதிய கணக்கு போட்டுக்கொள்வதும் அப்போதுதான்! பழைய கணக்கு முடித்து, சம்பளம் வாங்கிய கையோடு, கூட்டு வண்டியும் மாட்டு வண்டியுமாக குடும்பத்துடன் மதுரைக்கு வருவார்கள்.

ஆற்றில் மணல் திருட்டெல்லாம் அப்போது இல்லை. எனவே, கரை புரண்டோடுகிற வைகை ஆற்றுக்கு நடுநடுவே, ஆங்காங்கே மணல் திட்டுகள் இருக்கும். மாட்டுவண்டி ஆற்றில் இறங்கி, மணல் திட்டில் போய் நிற்கும். அங்கேயே சமைத்துச் சாப்பிடுவார்கள். பிறகு ஊரையெல்லாம் சுற்றிவிட்டு, அழகரையும் மீனாட்சியையும் பார்த்து விட்டு, மீண்டும் இங்கே வந்து மணல் திட்டில் தூங்குவார்கள்.

மதுரையில், மிகப் பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதற்குக் காரணமே இந்தச் சித்திரைத் திருவிழாதான். வியாபாரிகளிடம் இருக்கும் விற்காத பொருட்கள் எல்லாம் விற்று விடும். விரும்பியதெல்லாம் திருவிழாவில் கிடைக் கும். கிடைப்பதையெல்லாம் வாங்குவதற்குக் கையில் காசும் இருக்கும். மனைவி மக்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, பூரித்துப் போவார்கள் ஆண்கள். ஆக, காசு பார்க்கிற விழாவாக, பொருளாதாரம் சிறக்கும் விழாவாக மட்டுமின்றி, இல்லறம் மகிழ்ந்து செழிக்கிற விழாவாகவும் இருந்திருக்கிறது” என்று சரித்திரம் சொல்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

”என் பத்தாவது வயசில் இருந்தே சித்திரை விழாவைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அடாடா! என்னா கூட்டம்… என்னா கூட்டம்! சுத்தியிருக்கிற கிராமங்கள்லேருந்து, நேர்த்திக்கடனா அழகர் வேஷம் போட்டுக்கிட்டும், மத்த சாமிங்க வேஷம் போட்டுக்கிட்டும் ஆடிப்பாடி வருவாங்க.

இன்னொரு பக்கம், ஹரகர கோஷம் போட்டுக் கிட்டும் பாட்டுப் பாடிக்கிட்டும் பெருங்கூட்டம் வரும். அடுத்தாப்ல பார்த்தா, அழகருக்குத் தண்ணீர் பீய்ச்சியடிக்கறதுக்காக, ரப்பரால செஞ்ச விநோதமான வஸ்து ஒண்ணை வயித்துல கட்டிக்கிட்டு, தண்ணியைப் பீய்ச்சிப் பீய்ச்சி அடிப்பாங்க. அது அழகர் மேல மட்டுமா விழும்… அழகரைப் பார்க்க வந்திருக்கிற ஜனங்க மேலயும் விழும். இப்ப ஆட்டமும்பாட்டும் குறைஞ்சிருச்சு. ஆனாலும் உலக அளவுல, இந்தத் திருவிழாவை அடிச்சுக்க இன்னொரு விழா இல்லைன்னுதான் சொல்லணும்” என்கிறார் சாலமன் பாப்பையா.

சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் விழாவாக மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டாடச் செய்கிற விழாவாகத்தான் இதை மதுரை மக்கள் பார்க்கிறார்கள்.

”திருமாலிருஞ்சோலை என்று புராணத்திலும் சங்க இலக்கியங்களிலும் அழைக்கப்படும் அழகர்கோவிலில், பத்து நாள் விழாவாக நடைபெறும் சித்திரைப் பெருவிழா. ரிஷபாத்ரி, ரிஷபகிரி, அழகர்மலை, அலங்காரன் மலை, மாலிரும்குன்றம் என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து, சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் மூன்று நாட்களும், பெருமாள் கோயிலுக்குள்ளேயே புறப்பாடாகி, சேவை சாதிப்பார். கோயிலில், கல்யாண மண்டபம் என்று உள்ளது. இங்கே வருடத்துக்கு இரண்டு முக்கியமான தருணங்களில்தான் அழகர் தரிசனம் தருவார். அதாவது, சித்திரைத் திருவிழாவிலும், பங்குனி உத்திரத்தில், திருக் கல்யாணத்தின்போதும் இங்கு காட்சி தருவார்” என்கிறார் சுந்தர நாராயணன் என்கிற அம்பி பட்டாச்சார்யர். அலங்கார பட்டர் எனும் வம்சத்தைச் சேர்ந்தவர் இவர்.

”இந்தக் கல்யாண மண்டபம் விஜய நகரப் பேரரசால் கட்டப்பட்டது. 3-ம் நாள் மாலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்திலேயே கிளம்புகிறார் திருமால். அதாவது, ‘வஞ்சக் கள்வன் மாமாயன்’ என்று நம்மாழ்வார் பாடியது போலவே கள்ளழகராகக் காட்சி கொடுத்தபடி மதுரைக்கு வருகிறார். 4-ம் நாள் காலையில் இருந்து துவங்குகின்றன, பக்தர்களின் மண்டகப்படிகள். கிட்டத்தட்ட, அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் சென்று திரும்பும் வரை, எப்படியும் 450 இடங்களில் மண்டகப்படி பூஜைகள் நடைபெறு கின்றன. சீரியல்செட்டுகள், தோரணங்கள், அலங்காரங்கள், தேங்காய், பழங்கள், மலர்மாலைகள், வஸ்திரங்கள், திருப்பரிவட்டம் என ஒவ்வொரு மண்டகப்படியிலும் தயாராக வைத்திருந்து, பூஜை செய்வார்கள் பக்தர்கள்.

மூன்று மாவடி எனும் பகுதிதான் மதுரை நகரின் எல்லைப் பகுதி. அங்கிருந்து மண்டகப்படி பூஜைகள் ஆரம்பமாகும். 4-ம் நாள் இரவில், தல்லா குளம் பிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்துக்கு வந்து எழுந்தருள்வார் அழகர்.

அங்கே அவருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அப்போது தங்கக் குதிரை வாகனத்துக்கு மாறுவார். அழகர், தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வருகிற அதேவேளையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளான ஸ்ரீஆண்டாளின் மாலை வந்திருக்கும். மதுரை வரும் வழியெங்கும் இந்த மாலைக்கு சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படும்.

குதிரை வாகனத்தில் வரும் அழகரை எதிர்கொண்டு வரவேற்கிற எதிர்சேவை, வழியெங்கும் இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள், தல்லாகுளத்தில் கூடுவார்கள். பிறகு, தல்லாகுளத்தில் உள்ள சப்பரத்தடியான் எனப்படுகிற கருப்பண்ணசாமி கோயிலுக்கு வருவார் அழகர். அங்கே, ஆயிரம் பொன் சப்பரத்தில் அப்படியே குதிரையுடன் ஏறி நின்று, காட்சி தருவார். திருமலை நாயக்கர், ஆயிரம் பொன் செலவு செய்து, அழகருக்காக செய்த சப்பரம் இது.

பிறகு, விடிய விடிய அழகரை எதிர்கொண்டு அழைத்தபடி வரவேற்பார்கள் பக்தர்கள். 5-ம் நாள் விடியும் வேளையில், காலை 7 மணிக்கெல்லாம் அழகர் ஆற்றில் இறங்குவதற்குத் தயாராக வந்திருப்பார். அவரை, வைகையின் மறு கரையில், தெற்கு மாசி வீதியில் உள்ள ஸ்ரீவீரராகவ பெருமாள் இக்கரைக்கு வந்து வரவேற்பார். அப்போது, அழகருக்கு மாலை மரியாதைகளும் பரிவட்டங் களும் வழங்கப்படும். பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தங்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். அதையடுத்து, அழகர் ஆற்றில் இறங்குவார். அப்போது, ‘சோல மாமலை கோவிந்தா, சுந்தர்ராஜா கோவிந்தா’ என மக்கள் முழங்க, ‘கோவிந்தா’ கோஷம் விண்ணையே முட்டும்.

இங்கே, ஒரு விஷயம். அழகரின் ஆபரணங்களை எடுத்துச் செல்ல ஒரு மரப்பெட்டி, வஸ்திரங்களை எடுத்து வர இன்னொரு பெட்டி, பூஜைப் பொருட்களை எடுத்து வருவதற்காக மற்றொரு பெட்டி எனக் கொண்டு வரப்படும். இந்தப் பெட்டிகளை குறிப்பிட்ட கிராமத்தார் பரம்பரை பரம்பரையாக, மிகவும் பத்திரமாகவும், விரதம் மேற்கொண்டும் எடுத்து வருவார்கள். அழகர் ஒவ்வொரு இடத்துக்கு வருவதற்கு முன்னே, இந்தப் பெட்டிகள் தயாராக வந்திருக்கும். அந்தப் பெட்டிகளைக் கம்பு ஒன்றில் வைத்தபடி, கம்பின் இரண்டு முனைகளையும் இருவர் தோளில் வைத்துக்கொண்டு வருவதைப் பார்க்கும்போதே அருளாட ஆரம்பித்துவிடுவார்கள் பக்தர்கள்.  பிறகு, திவான் ராமராயர் மண்டபத்தில் சேவை சாதிப்பார் அழகர். பிறகு, ஸ்வாமி புறப்பாடு, வழிநெடுக ஸ்வாமிக்கு நைவேத்தியம், பிரசாதங்கள், வாண வேடிக்கைகள் எனக் களை கட்டும். அப்படியே வண்டியூரில் உள்ள ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலுக்கு வருவார் கள்ளழகர்.

6-ம் நாள் காலை, சிவகங்கை சமஸ்தானத்தாரின் கைங்கர்யம். வருடந்தோறும் அப்போது அழகர் சந்தன அலங்காரத்தில் மணக்க மணக்கக் காட்சி தருவார். பிறகு, குதிரை வாகனத்தில் இருந்து சேஷ வாகனத்துக்கு மாறுவார். அதையடுத்து, தேனூர் மண்டபத்தில், அழகருக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க, அலங்கார பட்டர் வம்சத்தினர் ஏடு எடுத்து

வாசிப்பார்கள். ஆண்டாள்- தோளப்ப ஐயங்கார் வம்சத்தினர் மண்டூக புராணம் வாசிக்க, நிறைவில் மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கி அருள்வார் அழகர்பிரான். மலையில் இருந்து அழகர் மதுரை நகருக்குள் வருவதன் நோக்கமும் இதுவே என்கிறது ஸ்தல புராணம்.

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ்
          சோலை மணாளர்வந்து, என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
           நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,
மஞ் சுயர் பொன்மலை மேலெ ழுந்த
          மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்,
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி
          வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா!

அதாவது, அழகிய கருடரையும் அதன் மேலேறி அழகுடன் வருகிற கள்ளழகரின் பேரழகையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை எனப் பாடுகிறார் ஆழ்வார்.

அடுத்து 6-ம் நாள், ஸ்வாமி புறப்பாடாகி, ராமராயர் மண்டபத்துக்கு வருவார். அன்றிரவு முழுவதும் தசாவதாரக் காட்சிகளில் சேவை சாதிப்பார் அழகர். 7-ம் நாள், மோகினி அலங்காரத் தில் சேவை சாதிக்கும் அழகர், அனந்தராயர் பல்லக்கில் ஏறி, ராமநாதபுரம் சேதுபதி ராஜா மண்டபத்துக்கு வந்து, எழுந்தருள்வார். இது, தல்லாகுளத்தில் உள்ளது. அன்றிரவு, அவருக்கு அங்கே திருமஞ்சன வழிபாடு நடைபெறும்.

8-ம் நாள் காலை, விடையாற்றிச் சப்பரம் எனும் பூப்பல்லக்கில் மக்களிடம் பிரியாவிடைபெற்று, அழகர்மலை நோக்கிக் கிளம்புவார் அழகர்பிரான். அன்றைய தினம், மறவர் மண்டபத்தில் திருமஞ்சன வழிபாடு நடைபெறும். உள்ளம் கவர் கள்வனாக, மதுரையில் உள்ள மொத்த மக்களையும் கவர்ந்து சென்ற கள்ளழகர், 9-ம் நாள் காலை அழகர்மலையைச் சென்றடைவார்.

”10-ம் நாள் உத்ஸவ சாந்தி பூஜைகள் செய்யப் பட்டு, திருமஞ்சன வழிபாடுகள் செய்யப்பட்டதும் விழா பூர்த்தியடைகிறது” என்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.

மதுரையின் சித்திரைத் திருவிழா நிறைவுறும் வேளை… மக்கள் மனத்துள் இனம்புரியாத ஒரு பிரிவுச் சோகம்.

”ஹூம்… இனிமே, அடுத்த சித்திரையிலதான் மதுரைல அழகரைப் பார்க்க முடியும். அவர் வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை!” என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள் மக்கள். அதேபோல, வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் அன்பர்கள் பஸ் பிடித்தும், ரயில் ஏறியும், கார்களிலுமாகக் கிளம்பும் வேளையில், ”அடுத்த வருஷமாவது சித்திரைத் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு நாள் சேர்த்து லீவு போட்டுட்டு வாங்கப்பு” என்று அன்போடு கோரிக்கை வைத்து, கையசைத்து வழியனுப்பி வைப்பார்கள் பாசக்கார மதுரை உறவினர்கள்.

மதுரை எப்பவுமே அப்படித்தான்… பாசமிகு பூமி!

thanks to vikatan.com

Leave a Reply