பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை. மதுரை நீதிபதி கருத்து
சிறுவயது பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும் குறைந்தபட்சமாக ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் கீரைத்துறை என்ற பகுதியை சேர்ந்த 15 வயது மகளை பெற்ற தந்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை குறித்த வழக்கு ஒன்று மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக பத்து லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தேவதாஸ், நாகரீகமான சமுதாயத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் மிகவும் கேவலமானது என்றும், இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
குற்றவாளியின் செயலுக்கு மதுவும் ஒரு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி மதுவிலக்கு கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலையில் இருப்பதாகவும், இதை ஊடகங்களும், பத்திரிகைகளும் விவாதப் பொருளாக்கி சட்டம் இயற்றும் அமைப்புகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.