ஜெயலலிதாவின் தூண்டுதலால் செயல்படுகிறாரா மு.க.அழகிரி?
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஒருபோது தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மு.க.அழகிரி கருத்து தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மு.க.அழகிரி, ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு பேசுவதாக திமுக தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் அழகிரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டனக்கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்தினர். இந்த கண்டனக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, பொன். முத்துராமலிங்கம், ஜெயராமன், குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் அழகிரிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
தொடர்ந்து தளபதி, வேலுச்சாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கருத்து கணிப்பு குறித்து அழகிரி கூறியது அநாகரிகமானது. ஸ்டாலின் அரசியல் நாகரிகத்துடன் திமுகவுக்கும், அழகிரி கருத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் அடாவடியாக அரசியல் நடத்திய அழகிரி, தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை.
தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ந்து துரோகத்தை செய்து வரும் அவர், தலைமைக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது ஜெயலலிதாவின் தூண்டுதலில் பேரில் அழகிரி செயல்படுகிறார் ” என தெரிவித்தனர்.