முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொலையாளிகள் குறித்து துப்பு துலங்கவில்லை.
ஏற்கனவே இந்த வழக்கு காவல்துறையினர்களிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. எனினும் இத்தனை ஆண்டுகளாக குற்றவாளிகள் பிடிபடாததால், இது தொடர்பாக ராமஜெயத்தின் மனைவி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம் விளக்கம் அளித்த சிபிசிஐடி காவல்துறையினர் ”இந்த வழக்கு முக்கிய கட்டங்களை எட்டியுள்ளதாகவும், இருப்பினும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் அளித்ததோடு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.