சிறப்புக் குழந்தைகள், தெய்வத்தின் குழந்தைகள். அப்படியொரு குழந்தையாக, மதுரை, பெத்சான் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவி ஜோன்ஸ் மெர்லின், உலக அளவில் இந்தியாவுக்கே இப்போது பெருமை சேர்த்திருக்கிறார்! ஆஸ்திரேலியாவில் நடந்த, மனவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 2013-ம் ஆண்டின் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், பெரிய அளவில் இருக்கும் குண்டுகளை, தரையில் வீசி விளையாடும் போட்டியான ‘பாச்சீ’ (Bocce) விளையாட்டில், இந்திய இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார், மெர்லின்!
”சந்தோஷம்னு ஒரே வார்த்தையில சொல்ல முடியல!” என தாய்மைப் பூரிப்புடன் ஆரம்பித்தார், மெர்லினின் அம்மா பாலின் சின்னராணி.
”நான் அரசுப் பள்ளி ஆசிரியை. மெர்லின் எனக்கு ரெண்டாவது மகள். அவளுக்கு நான்கு வயதாகும்போதுதான் மனவளர்ச்சியில் குறை இருப்பதைக் கண்டறிந்தோம். கணவரின் நண்பரோட வழிகாட்டுதல்படி பெத்சான் சிறப்புப் பள்ளியில் சேர்த்தோம். ஆரம்பத்துல எந்தவொரு வேலையையும் அவளால செய்ய முடியாது, ரொம்ப அடம் பிடிப்பா, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான் பேசுவா, மற்றவர்களோட பழகுறதுலயும் ரொம்ப பின்தங்கிய நிலை. போகப் போக நிறைய மாற்றங்கள்.
நிறைய குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்யேகமா அவங்க எடுத்துக்கற அக்கறை, தர்ற பயிற்சி எல்லா குழந்தைகளையும் தேக்க நிலையில் இருந்து மீட்குது. அப்படித்தான் 5 வயதுல எதுவுமறியாம இந்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்ட என் மகளையும், 18 வயதில் உலகப் போட்டியில் ஜெயிச்ச கோப்பையோட என் முன்ன நிறுத்தியிருக்காங்க. இதுக்காக பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் நிறைய நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். சென்னை, விமான நிலையத்துல, ‘அம்மா ஜெயிச்சுட்டேன்!’னு என் பொண்ணு ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சப்போ, அந்த ஆனந்தத்தை எனக்கு வார்த்தைகள்ல சொல்லத் தெரியல” என்று கண்ணீர் கசிந்த பாலின் சின்னராணி,
”என்போல சிறப்புக் குழந்தைகளைப் பெத்தவங்களே…. ஒருபோதும் சோர்ந்து போக வேண்டாம். நம்ம குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல சாதிக்கப் பிறந்தவங்கதான்!” என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்!
இயல்பான குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்கே ஆசிரியர்கள் திணறிப் போகும் நிலையில், சிறப்புக் குழந்தைகளை இவ்வளவு சிரத்தையாக மெருகேற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் ஐஸக் மற்றும் ரவியிடம் வாழ்த்துக்களைச் சேர்த்தோம்.
”மெர்லினுக்கு விளையாட்டில் இருந்த தனித்திறமையை கண்டுபிடிச்சப்போவே, நிச்சயம் இதில் இவளை உயரத்துக்குக் கொண்டு வரணும்னு உறுதி எடுத்துக்கிட்டோம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளா, தினமும் 3 மணி நேர பயிற்சி அளித்ததன் பலன் இது. மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை, சிறப்பு ஒலிம்பிக் அமைப்பு நடத்துது. இந்தியாவில் ‘சிறப்பு ஒலிம்பிக் பாரத்’ (Special olympics bharat) என்ற பெயர்ல செயல்பட்டு வரும் அந்த அமைப்பு, சிறப்புக் குழந்தைகளின் வயது மற்றும் திறனின் அடிப்படையில போட்டிகளை நடத்துது. அதை குறிக்கோளா வைத்தே மெர்லினை தயார்படுத்தினோம்.
2009-ல் சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடத்திய தடகளப் போட்டியில் கலந்துகிட்டு 100 மீட்டர் நடத்தல் போட்டியில் மெர்லின் தங்கம் ஜெயிச்சார். பிறகு, 2010-ல் ஆந்திராவோட அனந்தப்பூர்ல தேசிய தடகளப் போட்டியில், நின்றுகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். இதுபோல இன்னும் பல முக்கியப் போட்டிகள்ல பதக்கங்கள் குவிச்ச மெர்லினுக்கு, சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைச்சுது. ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் நகரில் நடந்த அந்தப் போட்டியிலதான் வெள்ளிப் பதக்கம் வாங்கித் தந்து, பெருமை சேர்த்திருக்கார் மெர்லின். இதுபோல 70 சிறப்புக் குழந்தைகள் எங்க பள்ளியில இருக்காங்க. ஒவ்வொருத்தரோட தனித்திறமையையும் கண்டறிந்து முறையான பயிற்சி கொடுக்கிறோம். மெர்லினைப் போல இன்னும் நிறைய சாதனையாளர்கள் எங்க பள்ளியில் இருந்து வருவாங்க!” என்று உறுதியுடன் கூறினார்கள்.
மெர்லின் பேசுவது, அவருடைய அம்மா, அண்ணன் மற்றும் கோச் இவர்களுக்கு மட்டுமே புரியும். நாம் பேசினால் நம்மையோ அல்லது வெளி ஆள் யார் பேசினாலும் அவங்களுடைய முகத்தையோ பார்க்க மாட்டார். அதனால், அவருடைய அண்ணன் மூலமாக மெர்லின் சொன்னது இதுதான்…
”என்னோட டீச்சர் ஐசக்தான் என்னை ரொம்ப மோடிவேட் பண்ணுவார். ஒவ்வொரு தடவை பிராக்டீஸ் போறப்பவும், ‘நீ கண்டிப்பா ஜெயிப்ப, மெடலோடதான் வருவே’னு என்கரேஜ் பண்ணுவார். ஒவ்வொரு தடவையும் அவரே போட்டி வெச்சு, அதுல நான் ஜெயிக்கிறப்ப எல்லாம் எனக்கு ஒரு மெடல் தந்து உற்சாகப்படுத்துவார். 2016-ல அமெரிக்காவுல ஏசியன்-பசிஃபிக் ஒலிம்பிக் கேம்ஸ் நடக்கப் போவுது. அதுக்காக இப்போ தீவிரமா என்னை டிரெயின் பண்ணிட்டு இருக்கார் சார். என் அம்மாவுக்கு அடுத்தபடியா, சார்தான் எனக்கு கடவுள்!”
அரசுக்கு ஒரு கோரிக்கை!
”சர்வதேச அளவில் சாதனை படைத்தாலும்கூட, சிறப்புக் குழந்தைகளின் திறமைக்கான அங்கீகாரம் தராதது இந்த சமுதாயத்தோட சாபக்கேடு. அவங்களோட வெற்றியை ஒரு செய்தியா பார்க்கறாங்களே தவிர, உளப்பூர்வமா கொண்டாடுறதில்லை. குஜராத் மாநில அரசு, சர்வதேச அளவில் பரிசு பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு தந்திருக்கு. இங்கேயோ, வெளிநாட்டுக்கு போய் வந்த செலவுத் தொகையைக்கூடத் தரல. அடுத்த வீட்டுக்காரங்களே பேசத் தயங்குற சிறப்புக் குழந்தைகள், அயல்நாடு வரை போய் விளையாடி, பதக்கத்தோட திரும்பிஇருக்கிறாங்க. இவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்யணும்ங்கிறதுதான் எங்க வேண்டுகோள்!”
– பெற்றோர்களும் பள்ளித் தரப்பும் இணைந்து கை கூப்புகிறார்கள்!