மதுரையில் சிவனின் திருவிளையாடல் ஆரம்பம்!

wedded-couple_1

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கருங்குருவிக்கு உபதேசித்த லீலையுடன் தொடக்கியது. மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் 17ம்தேதி வரை சந்திரசேகர் புறப்பாடு 2ம் பிரகாரத்தில் நடந்தது. சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் நேற்று தொடங்கின. முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் வருகிற 24ம் தேதி நடக்கிறது.

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்: ராஜராஜனின் மகன் சுகுணபாண்டியன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு பதவியேற்றான். அவனது ஆட்சிக்காலத்தில் கருங்குருவி ஒன்று மதுரை அருகில் இருந்த ஒரு நகரில் வசித்தது. முற்பிறப்பில், இந்தக் குருவி வலிமை மிக்க ஆண்மகனாக விளங்கியது. ஆனால், அவன் செய்த பாவவினையால் இப்பிறப்பில் குருவியாகப் பிறந்திருந்தான். இந்தக் குருவியை பருந்துகளும், காகங்களும் விரட்டி விரட்டி அடித்தன. குருவி பயத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருந்தது. இதனால், அவ்வூரை விட்டு கிளம்பி அருகிலிருந்த காட்டிற்குப் போய்விட்டது. அங்கே, காகம் போன்ற எதிரிப்பறவைகள் இல்லாததால் அங்கேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தது. ஒருமுறை, சிவனடியார் ஒருவர் அது தங்கியிருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அமர்ந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற சிலர் அடியவரை வணங்கினர். அவர்களுக்கு அவர் அறிவுரைகளைச் சொன்னார். மேலும், மதுரை நகரின் பெருமைகளை எடுத்துச் சொன்ன அவர், அந்த ஊருக்குச் சென்றாலே போதும்! நமக்கு பிறவிப்பிணி நீங்கிவிடும். அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம் உடலில் பட்டாலே போதும்! சகல வளமும் கிடைக்கும், மோட்சம் உறுதி, என்றார். இதை மரத்தில் இருந்து கேட்ட குருவி, சிவநாமத்தை உச்சரித்தபடியே மதுரை நோக்கிப் பறந்தது. கோயிலுக்குள் நுழைந்து பொற்றாமரைக் குள நீரில் தன் உடல் படும்படியாக உரசிக்கொண்டு மேலெம்பியது. பிரகாரத்தைச் சுற்றிப் பறந்து வலம் வந்து, மீனாட்சியம்மன் சன்னதிக்குள்ளும், சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள்ளும் இருந்த உத்திரத்தின் மேல் அமர்ந்து தெய்வதரிசனம் செய்தது.

மூன்று நாட்கள் தொடர் தரிசனம் செய்த அந்தக் குருவியைப் பற்றி அன்னை மீனாட்சி, தன் கணவரிடம் கேட்டாள். அதன் பூர்வஜென்மம் குறித்து அம்பிகையிடம் சுவாமி விளக்கினார். பின், அந்தக் குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை அவர் உபதேசம் செய்தார். அது ஆயுள்விருத்திக்கும், பிறவித்துன்பம் நீங்குதலுக்கும் உரியதாகும். மந்திரம் கேட்ட குருவி, இறைவனிடம், இறைவா! என்னை மற்ற பறவைகள் துன்புறுத்துகின்றன. அவற்றை சமாளிக்கும் அளவு எனக்கு பலத்தைத் தந்தருள வேண்டும், என்றது. இறைவனும் அதை ஏற்றார். குருவியே! உன்னை இனி மக்கள் வலியன் என்று அழைப்பார்கள். நீ பலம் மிக்க குருவியாக இருப்பாய். மற்ற பறவைகளை விரட்டும் ஆற்றல் பெறுவாய், என்று சொல்லி திரியம்பக மந்திரத்தையும் உபதேசித்தார். இந்த மந்திரத்தைக் கற்ற அந்தப் பறவை நீண்டகாலம் அதை உபதேசித்து இறையடி சேர்ந்தது. குருவிகளை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. அவற்றின் ஒலியை மந்திரஒலியாகவே கேட்க வேண்டும். ஏனெனில், வலியன் பறவைக்கு வரமளித்த இறைவன், உன் வம்சமும் இனி வலியன் என்றே அழைக்கப்படும், என்று சொல்லியுள்ளார். சுந்தரேஸ்வரப் பெருமான் குருவிக்கு உபதேசம் செய்தது மட்டுமல்ல! நாரைக்கும் முக்தி கொடுத்துள்ளார். மனித ஜீவன்கள் மட்டுமின்றி, தனது எல்லா படைப்புகளுக்கும் அவர் கருணை செய்துள்ளார்.

Leave a Reply