இன்று மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மறைந்த தங்களது முன்னோர்களின் நினைவாக அமாவாசை தினங்களில், கடல் மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து விரதம் இருப்பது வழக்கம். இதில் ஆடி மாதம், தை மாதம் மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
இந்த ஆண்டின் புரட்டாசி மஹாளய அமாவாசை இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி வருகின்றனர். அக்னி தீர்த்த கடற்கரையில், மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மஹாளய அமாவாசை தினத்தையொட்டி, ஸ்ரீராமர் இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி ராமேஸ்வரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநிலம் முழுவதும் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கான வசதிகளை ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம், ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.