பாவ விமோசனம் தரும் மகாமகக் குளம்

பாரத பூமியில் தங்களுடைய பாவங்களில் இருந்து விமோசனம் பெற கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, பொன்னி (காவிரி), சரயு, கோதாவரி என்று புண்ணிய நதிகளில் மூழ்கி எழுகின்றனர். அவ்வாறு பாவங்கள் கழுவப்பட்டதால் அதன் சுமை தாங்க முடியாத அந்நதிகளின் நவ கன்னியர்கள், தங்கள் பாவங்களை போக்கிக்கொண்ட சக்தி வாய்ந்த இடம் கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளமாகும்.

பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் கும்ப ராசியிலும், குரு பகவான் சிம்ம ராசியிலும் பெளர்ணமி அன்று மகர நடத்திர நாளில் கூடும்போது இக்குளத்தில் நீராடுவது எல்லா பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த நன்னாளில் பகல் 10.30 மணி முதல் 12 மணிக்குள் குடந்தை மாநகரில் உள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ள மூர்த்திகளும் இக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தமளிப்பார்கள்.

குடந்தை நகரின் முதல் தெய்வமான ஆதி கும்பேசுவரர் அருள்மிகு மங்கள நாயகியுடனும் மற்ற பரிவாரங்களுடனும் மகாமகக் குளத்தின் வடக்குக் கரையில் பிரம்மத் தீர்த்தக் கட்டத்தில் எழுந்தருளியிருப்பார்கள்.

அருள்மிகு நாகேசுவரர், சோமேசுவரர் முதலான எல்லா மூர்த்திகளும் அவர்களுக்குரிய தீர்த்தக் கட்டங்களில் அமர்ந்து தீர்த்தமளிப்பார்கள். அப்போது இந்திரன், பிரம்மன் முதலான எல்லாத் தேவர்களும் இங்கு எழுந்தருளுவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்புனித நேரத்தில் மகாமகக் குளத்தில் நீராடுவோர் தேவர்கள் அனைவரையும் தரிசனம் செய்த புண்ணியம் பெறுவார்கள். பாவம் நீங்கி நிறைந்த செல்வம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குளத்தின் மத்தியில் இருக்கும் கன்னியா தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் பல்லாயிரம் தடவை மூழ்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

மகாமகத் தீர்த்தத்தைச் சுற்றிலும் வசதியான கருங்கல் படிக்கட்டுகள் அழகாக அமைந்துள்ளன. குளத்தில் எல்லாக் காலங்களிலும் நீர் நிறைந்திருந்தாலும் மகாமக தினத்தன்று விபத்து நேராமல் இருப்பதற்காக நீரை இறைத்துவிட்டுத் தூய்மைப்படுத்தி, இரண்டு அல்லது மூன்று அடி தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். குளத்தைச் சுற்றுலும் 16 மண்டபங்கள் கட்டப்பட்டு, அவற்றிலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமகக் குளத்தின் வடமேற்குப் படிக்கட்டுகளின் உச்சியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழும் 16 தூண்கள் கொண்ட அழகிய மண்டபம் உள்ளது. இம்மண்டபம் ஆதி கும்பேசுவரர் விழாக் காலங்களில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பதற்கென கோவிந்த தீட்சிதர் என்ற அமைச்சரால் கட்டப்பட்டதாகும்.

மகாமகத்து நாளில் நவ கன்னியர்கள் நீராடி பாவச் சுமைகளில் இருந்து மீண்டதால், இத்தீர்த்தத்திற்கு கன்னியர் தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. பாரத நாட்டின் ஒன்பது பெரு நதிகளின் கன்னியர்களும் மகாமகக் குளத்தில் நீராடியதால், அந்த நதிகளில் நீராடிய புண்ணியம் மகாமகக் குளத்தில் முழ்கி எழ கிட்டும் என்பது நம்பிக்கை.

Leave a Reply