மும்பை புறநகர் ரயில்கட்டண உயர்வால் மும்பை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா எம்.பிக்கள் பத்து பேர்கள் இன்று ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதால் மும்பை புறநகர் ரயில் கட்டண உயர்வு பரிசீலிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இருப்பினும் புறநகர் ரயில்கட்டணம் தவிர மற்ற கட்டணங்கள் உயர்வில் எவ்வித மாற்றமும் இல்லை அவர் தெளிவாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனா கட்சி எம்.பி. கீர்த்தி சோமையா இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ” முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால்தான் ரயில் கட்டணத்தை உயர்த்தும் நிலை வந்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால், இந்த முடிவு பொது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, அமைச்சர் தனது துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து ரயில்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்” என்று கூறினர்.
புறநகர் ரயில்கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடியிடம் ரயில்வெ அமைச்சர் கலந்து பேசவுள்ளதாகவும், நல்ல பதில் அவர்களிடம் இருந்து வரும் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் 10 எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.