மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மணமகள் ஒருவர் தன் பிறந்த வீட்டு சீதனமாக ரெடிமேட் கழிவறையைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை அகோலாவில் வசித்து வரும் சைதாலி டி.கலாக்கே அவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திர மகோதே என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணம் நிச்சயம் ஆன பின்னர் மணமகன் வீட்டில் கழிவறை இல்லை என்பது மணமகள் சைதாலிக்கு தெரிய வந்தது. சிறுவயதில் இருந்தே வீட்டில் கழிவறையைப் பயன்படுத்தி வந்த சைதாலிக்கு புகுந்த வீட்டில் கழிவறை இல்லை என்பதை அறிந்து மிகுந்த கவலையடைந்தார்.
எனவே இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் ஆலோசித்த அவர், தனது திருமணத்திற்கு பிறந்த வீட்டுச் சீதனமாக நகைகள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் ஆகியவற்றுக்கு பதிலாக ரெடிமேட் கழிவறை ஒன்றைத் தருமாறு அவர் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்கள் பின்னர் மகளின் நிலைமையைப் புரிந்துகொண்டு அவருக்கு ரெடிமேட் கழிவறையை சீதனமாக அளித்துள்ளனர்.
கழிவறையை சீதனத்தை கொண்டு வருவதை கண்டு மக்கள் சிரிப்பார்களோ என்று சைதாலியின் பெற்றோர் கவலையடைந்தனர். ஆனால், திருமணத்துக்கு வந்திருந்த பலரும் அந்த ரெடிமேட் கழிவறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டதோடு, மண மக்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அந்த திருமணத்துக்கு வந்திருந்த பல இளம் பெண்கள், தங்களின் திருமணத்தின்போதும் இத்தகைய சீதனத்தை மட்டுமே கேட்போம் என்று உறுதிகூறினர்.
மக்கள் எல்லோரும் பாராட்ட, மணமக்களோ தங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்க உள்ள ‘வாழ்க்கைத் துணை’யை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.