ஷீனா போரா கொலை வழக்கு திடீரென சிபிஐக்கு மாற்றம்
மும்பை போலீஸார் இதுவரை நடத்தி வந்த ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை தற்போது திடீரென சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாக மகாராஷ்டிர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் இவரது இரண்டாவது மனைவி இந்திராணி, தனது முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகளை தன்னுடன் பிறந்த சகோதர, சகோதரி என்று இரண்டாவது கணவரிடம் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி இந்திராணியின் தங்கை என்று கூறப்பட்ட அவரது மகள் ஷீனாபோரா மர்மமான முறையில் மாயமானார். அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக இந்திராணி நம்ப வைத்து நாடகமாடினார். ஆனால் திடீர் திருப்பமாக பெற்ற மகளை இந்திராணியே கொலை செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது. அவரது 2-வது கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மும்பை புறநகர் பகுதியில் ஷீனா போராவின் உடலை மூவரும் சேர்ந்து எரித்திருப்பது டிஎன்ஏ சோதனையில் உறுதியாகி உள்ளது.
மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கை மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணையை தலைமையேற்று நடத்திய போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா திடீரென கடந்த 8ஆம் தேதி இடமாறுதல் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக நியமனம் செய்யப்பட்ட அகமது ஜாவித் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என ஊடகங்களின் தரப்பில் இருந்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு ஏதுவாக ஷீனா போரா வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக் ஷி மும்பையில் நேற்று வெளியிட்டார்.
சிபிஐ விசாரணையில் ஷீனா போரா கொலை வழக்கில் மேலும் பல மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.