7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் டிசியில் கிரிமினல் என்று குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வினோபா பவே என்னும் நகரில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று காஷ்மீர் வித்யா மந்திர் என்னும் பள்ளி. இந்த பள்ளியில் ஒரு மாணவன் 7ஆம் வகுப்பு படித்து வந்தான். வகுப்பறையில் சிறு சிறு சேட்டைகள் செய்யும் இவன், ஆசிரியரின் பேச்சையும் கேட்கமாட்டான். அதனால் இவனது ஆசிரியை தலைமை ஆசிரியையிடம் புகார் கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியை அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து அந்த மாணவன் இனியும் எங்கள் பள்ளியில் கல்வியை தொடர அனுமதிக்க முடியாது என்று கூறி டிசியை கொடுத்துவிட்டார். அந்த டிசியில் மாணவன் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த டிசியை பிரதி எடுத்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆங்கில நாளிதழில் இந்த செய்தி வெளிவந்தவுடன், மாணவனின் எதிர்காலத்தை இருண்ட காலமாக்கிய வித்யா மந்திர் பள்ளியின் தலைமை ஆசிரியை நுட்டன் ஜன்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில கல்வி துறை உத்தரவிட்டதோடு, தலைமை ஆசிரியையைசஸ்பெண்ட்டும் செய்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.