அமைச்சரின் ஹெலிபேடுக்காக 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண். மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் ஐ.பி.எல் போட்டிகளே இடமாறிக்கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஒருவர் ஹெலிகாப்டரில் இறங்குவதற்கு வசதியாக அவர் இறங்கும் ஹெலிபேட்டுக்காக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிய செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மொத்தம் நான்கு சிறப்பு ரயில்கள் நேற்று கிளம்பி மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பிராந்தியத்துக்கு தண்ணீர் டேங்கர்களுடன் வந்து சேர்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்களுக்காக இந்த தண்ணீர் கொண்டு வரப்பட்ட நிலையில் பா.ஜ.க. வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே என்பவர் கிராமம் ஒன்றுக்கு பணிநிமித்தமாக செல்லும் ஹெலிகாப்டருக்கு ஹெலிபேட் அமைக்க ராஜஸ்தானில் இருந்து வந்த தண்ணீரில் 10 லட்சம் லிட்டர் பயன்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் தண்ணீர் பஞ்சத்தையும், மக்கள் படும் அவஸ்தையையும் பொருட்படுத்தாமல், அமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக தண்ணீர் வீணாக்கப்பட்டு ஹெலிபேட் அமைக்கபட்டு உள்ளதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த செயலுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.