மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் தனது முதல்வர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் என கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பிரித்திவிராஜ் சவான் முதல் மந்திரி பதவியிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி நடக்கவுள்ள மகாராஷ்ட்ரா மாநில சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
மேலும் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே மெஜாரிட்டையை இழந்துவிட்ட காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த பிரித்விராஜ் சவான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னரிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து விரைவில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.