மகாத்மா காந்தி கொலை குறித்த விசாரணை அறிக்கைக்கு வீர சாவர்க்கரின் பேரன் எதிர்ப்பு
மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பின்னணியாக இருந்து சதிவேலை செய்தவர்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள், வீர சாவர்க்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைப்பதாக இருப்பதாகவும், அந்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, “மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே, நாரயண் ஆப்தே ஆகியோரை, வீர சாவர்க்கரின் ஆதரவாளர்கள் என நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதில் சிறிதுகூட உண்மை இல்லை.
கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தி கொல்லப்பட்டார். அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே கோட்ஸேவுடனான தொடர்புகளை சாவர்க்கர் முறித்துக் கொண்டார். இவ்வாறு இருக்கும்போது இந்த கருத்து பொய்யானது என்பது தெரியவருவதாக ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாவர்க்கர் மரணமடைந்தார். அதன்பின், 6 மாதங்கள் கழித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையிலான விசாரணைக் குழு, 1969-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.