அப்துல்கலாம் வாழ்ந்த டில்லி ராஜாஜி மார்க் பங்களா காலி செய்யபட்டது.
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகவும், முன்னாள் குடியரசு தலைவராகவும் இருந்த அப்துல்கலாம் அவர்களின் உடைமைகள் டில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது உறவினர் இல்லத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 204 பெட்டிகளில் வந்துள்ள அவரது உடைமைகளில் பெரும்பாலானவை புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு அந்த பங்களாவை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இந்த வேண்டுகோளை நிராகரித்த மத்திய அரசு அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அவரின் உதவியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து பங்களாவில் இருந்த அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் அடைத்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. பெரும்பாலான பெட்டிகளில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் இருந்தது என்றும் அந்த பெட்டிகள் 27ம் தேதி ராமேஸ்வரம் வந்தது என்றும் பெட்டிகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டதாகவும் அவரின் உறவினர் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் வசித்த அந்த பங்களா தற்போது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Mahesh Sharma to move into Abdul Kalam’s Rajaji Marg