இலங்கையில் அதிபர் பதவியை இழந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை பிடிக்க திட்டமா?
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்து அதிபர் பதவியை இழந்த மஹிந்தா ராஜபக்சே, தற்போது பிரதமர் பதவியை பிடிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கு ஆளும் சிறிசேனா அரசு மறுத்துவிட்டதாகவும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி திட்டவட்டமாக அறிவித்து உள்ளதால் ராஜபக்சேவின் பிரதமர் கனவும் தவிடுபொடி ஆகியது.
இலங்கையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அவரது ஆதரவாளர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியை வலியுறுத்தி வந்தனர். ராஜபக்சேவும் இதற்காக திரைமறைவில் இருந்து காய்நகர்த்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான ரஜித சேனரத்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பிலோ அல்லது அக்கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியின் சார்பிலோ ராஜபக்சே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதில்லை. தேர்தல் தொடர்பான 6 பேர் குழு, அதிபர் சிறிசேனாவுடன் கடந்த புதன்கிழமை நடத்திய ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். இந்த அறிவிப்பால், மீண்டும் அரசியலுக்கு வர நினைத்திருக்கும் ராஜபக்சேவின் கனவு தகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.