தனது பெயரை டைட்டில் வைத்துள்ள பாலிவுட் படத்தை தடை செய்ய வேண்டும் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது. “மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்தின் தலைப்பை படத்தின் தயாரிப்பாளர் மாற்றுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நேற்று நீதிமன்றம் சமரசம் செய்தது.
‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் பாலிவுட் படம் ஒன்று மும்பை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரம் இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் தன்னை பற்றி தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், “மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்” படத்தின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வர்ஷா புரொடக்ஷன் சார்பில் ஆஜனரான வழக்கறிஞர், ரஜினிகாந்த்தின் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்றும், படத்தின் பெயரை “மெய்ன் ஹூன் பார்ட் டைம் கில்லர்” என மாற்றுவதாகவும் கூறினார்.
ரஜினிகாந்த்- வர்ஷா புரொடக்ஷன் தரப்பில் சமரசம் ஏற்பட்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.