இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலையில் ஹெல்மெட் போடாததால்தான் நிகழ்கிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் வந்தது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இதை சரியாக பின்பற்றாத காரணத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் நேற்று சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், மீறுபவர்களின் லைசென்ஸ் பறிமுதல் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸை பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது