திமுகவுடன் இணைகிறது மக்கள் தேமுதிக. காலியாகிறது விஜயகாந்த் கட்சி
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேராமல், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததால் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க.வின் 3 எம்.எல்.ஏ.க்கள், 10 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெற்றனர். மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் தேமுதிகவை விட அதிக ஓட்டுக்கள் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிஅலியில் மக்கள் தே.மு.தி.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற முடிவு செய்து தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க.வை இணைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தி.மு.க.வில் இணைவது என்ற முக்கிய முடிவும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மக்கள் தேமுதிக அமைப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், தமிழகம் முழுவதும் இருந்து தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் விலகி எங்களுடன் கைகோர்த்து உள்ளனர். தி.மு.க.வில் இணைவது குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து நாளை முடிவு செய்வோம் என்று கூறினார்.
திமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கப்பட்டவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தி.மு.க.வில் இன்று மாலை இணைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தே.மு.தி.க.வில் இருந்து மேலும் பல நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தேமுதிக கூடாரமே கிட்டத்தட்ட காலியாவதாகவும் கூறப்படுகிறது.