முன்னாள் எம்.பியும் அதிமுகவின் முக்கிய தலைவருமான மலைச்சாமி இன்று திடீரென அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். நேற்று மலைச்சாமி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்காக அளித்த பேட்டியின் அடிப்படையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மலைச்சாமி, “ஜெயலலிதாவும் மோடியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், பாரதிய ஜனதாவுக்கு அதிமுக ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கலாம்” என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று கொடநாட்டில் இருந்து திரும்பிய ஜெயலலிதா,” தேர்தல் முடிவு வெளிவந்த பின்னரே அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.
நேற்று ஊடகங்கள் ஜெயலலிதாவின் பேட்டிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட மலைச்சாமியின் பேட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானதால், அதன் எதிரொலியாகவே அவர் கட்சியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.