மலாலாவுக்கு அமைச்சர்களுக்குரிய பாதுகாப்பு வழங்க பிரிட்டன் அரசு உத்தரவு
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி அதன்பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு 24 மணி நேரமும் தகுந்த பாதுகாப்பு வழங்க பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடினார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் 14 வயது சிறுமியாக இருந்தபோது தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மலாலா, மேல்சிகிச்சைக்காக பிரிட்டனின் பர்மிங் ஹாம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் உடல்நலம் தேறிய பிறகு நிரந்தரமாகவே அதே நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உளவுத் துறை சமீபத்தில் எச்சரித்துள்ளதை அடுத்து அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் கூறியபோது, அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு மலாலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.