இங்கிலாந்தில் மலாலா படிக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மாணவி மலாலா மீது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்கியதால் அவர் பலத்த காயம் அடைந்து லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். இந்த சம்பவத்திற்கு பின்னர் மலாலா இங்கிலாந்து நாட்டிலேயே தங்கி அங்குள்ள பிரிமிங்காம் நகரில் உள்ள எட்பாஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது 18 வயது ஆகிறது.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் மலாலா படிக்கும் பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் பெயரில் வந்த இந்த மிரட்டலில் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து மலாலா உள்பட அனைத்து மாணவ, மாணவியர்களும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதேபோல ஆஸ்திரேலியாவிலும் சிட்னி நகரில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் ஒரே நபர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Chennai Today News: Malala Yousafzai’s school evacuated after receiving hoax bomb threats in UK