கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசிய விமானம் MH370 மாயமாய் மறைந்து அதில் பயணம் செய்த 239 பயணிகளும் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நான்காவது பயணி ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு $30,000 பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்னர் அந்த பணத்தை ஏ.டி.எம் நிலையத்தில் இருந்து பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த முறைக்கேட்டை தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் HSBC வங்கி கண்டுபிடித்துள்ளது. அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதே வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரும் அவருடைய கணவரும் சேர்ந்துதான் இந்த கொள்ளையை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இன்று காலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவி செய்த பாகிஸ்தான் நபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரிடம்தான் பணம் முழுவதும் இருப்பதாக கூறப்படுகிறது.
33 வயதான HSBC வங்கி பெண் ஊழியரான அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த திருட்டை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும், அவர்கள் இருவரையும் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஜானுதின் அகமது கூறியுள்ளார். மறைந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருப்பவர்களை இன்னும் மீட்புப்படையினர் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து மனசாட்சியே இல்லாமல் பணம் திருடிய அந்த தம்பதிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.