மலேசியா நாட்டின் துணை பிரதமர் உள்பட நான்கு முக்கிய அமைச்சர்களை, பிரதமர் நஜீப் ரசாக் திடீரென அதிரடியாக நீக்கியுள்ளதால் மலேசியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கிய ‘ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பு மூலம் சட்டவிரோதமாக ரூ.4,480 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நஜீப் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என்றும் இந்த ஊழல் விவகாரத்தை சரியாக கையாளாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற முடியாது என்றும் துணை பிரதமர் முகைதீன் யாசின் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார்.
அரசில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியது அரசின் கூட்டுப்பொறுப்பு என்ற கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரதமர் நஜீவ் ரசாக், துணை பிரதமரையும் அவருக்கு ஆதரவாக இருந்த நான்கு அமைச்சர்களையும் அதிரடியாக இன்று காலை நீக்கியுள்ளார். மேலும் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அட்டார்னி ஜெனரல் அப்துல் கனி பட்டாயிலும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி நீக்கங்கள், மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்தபோது, ‘“முகைதீன் யாசினை மாற்றுவது என்பது கடினமான முடிவுதான். ஆனால் சரி என தோன்றுவதை சரியாக செய்வதுதான் நல்ல தலைமை. இருந்தபோதிலும், இதுவரை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் செய்த பணிகளுக்காக, அர்ப்பணிப்புகளுக்காக முகைதீன் யாசினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீக்கப்பட்ட பிற மந்திரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” என கூறினார்.