மலேசியாவில் கீதை அருளிய கண்ணன்.

விளக்கின் அடியில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. அந்த விளக்கில் இருந்து சற்று தொலைவில்தான் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்து பிரகாசிக்கும். சாதாரண விளக்குக்கே இப்படியென்றால், ஞான விளக்குக்கு..?

உலகுக்கே ‘கீதை’ என்னும் ஞான தீபத்தை ஏற்றி உயரே தூக்கிப்பிடித்த கீதாசார்யனுக்கு, கீதை தோன்றிய நம் நாட்டிலோ அல்லது உலகிலேயே வேறெங்குமோ இல்லாத அளவுக்கு, பிரமாண்டமானதொரு கீதோபதேச சிலையை மலேசியாவில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியா என்றதுமே, ஆகாயம் அளாவ நிற்கும் பத்துமலை முருகன்தான் நம் நினைவுக்கு வருவார். இப்போது அவர் அருகிலேயே, அவர் மாமனான கீதோபதேச கண்ணனும், ‘அனுமன் முற்றம்’ என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்.

நுழைவாயிலிலேயே, விஸ்வரூபம் எடுத்த நிலையில்- ஆஞ்ச நேயர் தன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் சீதாராமரை நமக்குக் காண்பிக்கிறார். அவருக்குப் பின்னால், பெரும் குகை ஒன்று இருக்கிறது. அதன் வாயிலின் மேற்புறத்தில், ‘சுயம்பு லிங்கக் குகை’ என எழுதப்பட்டிருக்கிறது. குகையின் உட்புறமாக வலது கைப் புறத்தில், ஏறத்தாழ நூறு அடிக்கு மேல் உள்ள உயரமான இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் (தானாகவே உருவான சிவலிங்கம்) உருவாகி உள்ளது. அது தவிர, குகையின் உள்ளே ராமாயணக் காட்சிகள்… புத்திர காமேஷ்டி யாகம் முதல் ஸ்ரீசீதாராமப் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்துக் காட்சிகளும் மிக அற்புதமான வண்ணச் சிலை களாக உள்ளன. ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் நேரில் காண் பது போன்று அவ்வளவு தத்ரூபமாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, கும்பகர்ணன் படுத்திருக்கும் தோற்றத்தை பிரமாண்டமான முறையில் அமைத்திருக்கிறார்கள். தூங்குகின்ற கும்பகர்ணனை வீரர்கள் பலர் எழுப்பும் காட்சி, அப்படியே கம்பரின் பாடல்களுக்கு விளக்க உரை போல கண்களுக்கு எதிரில் காணக் கிடைக்கிறது.

ராமாயணக் காட்சிகள் நிறைந்த இந்தக் குகைக்கும், அனுமன் முற்றத்தின் தொடக்கத்திலேயே இருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும் நடுவேதான்… உலகிலேயே பிரமாண்டமான ‘கீதோபதேச சிலை’ நிறுவப்பட்டுள்ளது.

சீறிப் பாய்ந்து செல்லத் தயாராக இருக்கும் குதிரைகள், அவற்றின் கடிவாளங்களைக் கையில் பிடித்தபடி தேரில் நின்ற நிலையில் கீதோபதேசம் செய்யும் கண்ணன், அவர் எதிரில் கைகளைக் குவித்தபடி பணிவோடு கீதோபதேசத்தைக் கருத்தோடு கேட்கும் அர்ஜுனன்..!

கண்ணனின் பின்னால் தேரின் பின்பகுதியும், பின் சக்கரங்களும் அமைந்திருக்க, (தொடக்கத் தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரைவிட உயரமான) வண்ணமிகு நாராயணர் சிலை, நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பின்புறத்தில் இருக்கும் குகையின் மேற்பகுதி முகடுகளிலும், பத்து மலை முகடுகளிலும் மேகங்கள் ஊர்ந்து போக, மலைகளில் இருந்து சிற்றருவிகள் விழ, அவற்றில் இருந்து பன்னீர்த் துளிகளைப் போலத் தண்ணீர்த் துளிகள் தெளிக்க… தேரின் குதிரைகளின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் இருந்தும் தண்ணீர்த் துளிகள் தெளிக்க… இப்படிப்பட்ட குளுமையான சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை, இரவில் வண்ணமயமான விளக்குகளின் ஒளியில் மிகவும் ரம்மியமாக மனத்தைக் கவர்கிறது.

ராமாயணத்தில் தூது சென்றவ ரின் (ஆஞ்சநேயர்) அருகே, மகா பாரதத்தில் தூது சென்றவரின் (கண்ணனின்) சிலையைப் பொருத்த மாக அமைத்தவர்கள், அதற்கு வேறொரு காரணமும் கூறினார்கள்.

‘கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தபோது, அந்தத் தேரின் கொடியில் இருந்தபடி அதைக் கேட்டவர் ஆஞ்சநேயர். அதனால்தான் அவர் அருகிலேயே இந்தக் கீதோபதேசச் சிலையை நிர்மாணித்தோம்’ என்றார்கள்.

கண்ணன் உபதேசம் செய்யும் அந்தப் பிரமாண்டமான காட்சி யைப் பார்ப்பதற்காக, சூரியபகவா னும் தன் தேரை திசை திருப்பி ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார். ஆம்! சூரியன் திசை திரும்பிப் பயணத்தைத் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலமான, ‘தை’ மாத முதல் தேதியன்று…

கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான் – என்று சீர்காழியின் பாடலும்,

வயலைத்தேடி பொழியும் மழைபோல் வருகின்றான் கண்ணன் – என்று டி.எம்.எஸ். பாடலும் மலைகளில் எல்லாம் எதிரொலிக்க, அந்தப் பிரமாண்டமான ‘கீதோபதேச சிலை’ திறக்கப்பட்டது.

மலேசியாவில் உயர்ந்த விருதுகளைப் பெற்ற டான் ஸ்ரீடத்தோ ஆர்.நடராஜர் இந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசும்போது, சிலையைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டார்.

”ஏறத்தாழ மூன்று ஆண்டுக் காலமாக உருவானது இந்தச் சிலை. 43 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட இந்தச் சிலையில் 13 குதிரைகள் உள்ளன. கீதை சொல்லும் கண்ணனின் கைப்பிடியில் கடிவாளங்களோடு அந்த 13 குதிரைகளையும் அமைத்தோம்.ஞானேந்திரியங்கள்- 5, கர்மேந்திரியங்கள்- 5, மனம் – புத்தி அகங்காரம் என்பவை மூன்று; ஆக, மொத்தம் 13. இவற்றை உணர்த்துவதற்காகவே 13 குதிரைகள் வைத்தோம்.

அவற்றிலும், மனம் போன போக்கில் ஓரம் போகக்கூடாது என்று, முதலில் ஒரு குதிரையை வைத்து, அதன் பின்னால் ஆறு ஜோடிக் குதிரைகளை அமைத்து, கடிவாளங்களைக் கண்ணன் கைப்பிடியில் அமைத்தோம். கீதை சொல்லும் அந்தக் கண்ணன் நமக்கு நல்வழி காட்டட்டும்” என்று குறிப்பிட்டார் நடராஜர்.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்ட, அந்தக் கண்ணனின் அழகுமிகு எழில் கோலம் நம் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது.

கண்ணனின் காட்டிய வழியில் நடப்போம்!

கசக்கிப் பிழியும் துயரங்களைக் கடப்போம்!

Leave a Reply