45 நாட்களுக்கு பின் அவசர பிரகடனம் நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்புகிறது மாலத்தீவு
மாலத்தீவில் கடந்த சில நாட்களாக அசாதாரண நிலை இருந்து வந்த நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அவசர நிலை பிரகடனம் 45 நாட்களுக்கு பின்னா் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை திடீரென தகுதி நீக்கம் செய்ததோடு அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே சிறையில் அடைத்தார் அதிபர் அப்துல்லா யாமீன்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பொதுமக்களின் புரட்சியை சமாளிக்க கடந்த பிப்ரவரி 5ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் மாலத்தீவுகளில் விதிக்கப்பட்ட அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபா் அறிவித்துள்ளார். அதன்படி 45 நாட்கள் கழித்து அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது. அவசர நிலை அமலில் இருந்த காலத்திலும் அங்குள்ள சாமானிய மக்களிடம் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
maldives president lifts 45 day state of emergency