இம்மலையில் ஏறி செல்லும் போது மேக கூட்டங்கள் நம்மீது தவழ்ந்து செல்லும். சுமார் 700 அடி உயரம் செங்குத்தான கடப்பாறை படி மற்றும் தண்டவாளம் படி, ஏணிப்படி, ஆகாயப்படி என அனைத்தையும் கடந்து செல்லும் ஒரு சிறப்பு வாய்ந்த மலை ஆகும். மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும் மூலிகை மருத்துவம் கொண்ட மலையாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை மற்றும் இரவில் முதல் கால வேள்வி ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 2-ம் கால வேள்வி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் விநாயகர், முருகர், அம்பாள் சாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர சாமி கோவிலிலும், பச்சையம்மன் கோவில் அருகில் மலை மீது அமைந்துள்ள மவுன யோகி விடோபானந்த மடத்திலும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை, திருவல்லிக்கேணி பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கமும், தென்மாதிமங்கலம், கோவில் மாதிமங்கலம், கடலாடி ஆகிய கிராம பொது மக்களும் செய்து இருந்தனர்.