மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் உருளைக்கிழங்கு ஏற்றுமதியை தடை செய்யும் அதிரடி உத்தரவு ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். உருளைக்கிழங்கின் விலையேற்றத்தை தடுக்கவே இந்த உத்தரவு என முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு விற்று வந்த உருளைக்கிழங்கு தற்போது இருமடங்கு விலையேறிவிட்டது. இதற்கு காரணம் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உருளைக்கிழங்குகள் ஏற்றுமதி ஆவதுதான் காரணம் என்பதை அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
உருளைக்கிழங்குகள் இந்தியாவில் மேற்குவங்கத்தில்தான் அதிகம் விளைகிறது. அதிகம் விளையும் மாநிலத்திலேயே விலையேறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று எண்ணியே முதல்வர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து நேற்று ஒடிஸாவுக்கு சென்ற 250 உருளைக்கிழங்கு லாரிகளை மேற்கு வங்க மாநில போலீஸார் எல்லைச் சாவடியில் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். இதனால் ஒடிசா உள்பட பல மாநிலங்களில் உருளைக்கிழங்கின் விலை கடுமையாக ஏற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் (நாஃபெட்) உதவியை ஒடிஸா அரசு நாடியுள்ளது.