மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு தொடர்ந்து குழுக்களை அனுப்பி பழிவாங்கும் போக்கில் நடந்துகொண்டால், மத்திய அரசுடன் ஒத்துழைக்க மாட்டோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக அறிவித்துள்ளார். இதனால் மேற்குவங்கத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 7 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரசாரின் தாக்குதலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ரஜிம் பேஷக் கொல்லப்பட்டது பற்றி நேரில் விசாரணை செய்ய மத்திய அரசு சார்பில் ஒரு குழு இன்று விசாரணை நடத்த கொல்கத்தா வந்திறங்கியது. மேலும் இந்த குழு மேற்குவங்க சட்டம் ஒழுங்கு குறித்தும் அறிக்கை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்குவங்க மாநில அரசை கலைக்க முயற்சி செய்வதாக மத்திய அரசு மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “‘நாங்கள் மத்திய அரசுடன் அரசியல் சாசன சட்டப்படியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசோ, எங்களுடன் ஒத்துழைக்க மறுத்து எங்களை ரகசியமாக கண்காணித்தும் வருகிறது.. மத்திய அரசு இதே போக்கை கடைபிடித்து, எங்களுடன் ஒத்துழைக்க மறுத்தால் நாங்களும் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மாட்டோம். பதிலுக்கு பதில் கொள்கையை கடைப்பிடிப்போம். அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணித்து குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.