பாரதிய ஜனதா கட்சியின் அச்சுறுத்தலுக்கு பயந்து கட்சியை விட்டு விலகுபவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்றும் அவ்வாறு வெளியேறுபவர்களை நான் தடுக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 2 பேர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில முக்கிய திரிணாமூல் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே சிபிஐயின் நெருக்கடியை சமாளிக்க பாரதிய ஜனதாவில் சேர சில திரிணாமுல் தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்கள் கூறும்போது, “திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலக நினைப்பவர்கள் தாராளமாக விலகி செல்லலாம். அவர்கள் யாரையும் நான் தடுக்க மாட்டேன். ஒருசில தலைவர்கள் கட்சியைவிட தாங்களே பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். அவர்கள் யார், யார் என்று அனைவருக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளார். மேலும் சாரதா சிட்பண்ட் வழக்கில் மம்தாவும் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மம்தாவை கைது செய்தால் மேற்குவங்க மாநிலம் பற்றி எரியும் என திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.