என்னை கொலை செய்ய விரும்பினால் தாராளமாக வந்து கொலை செய்து கொள்ளுங்கள். மம்தா ஆவேசம்

mamthaமேற்குவங்க மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை பார்த்து ஆறுதல் கூற சென்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் காருக்கு வழிவிடாமல் போராட்டம் செய்த போராட்டக்காரர்கள் முன் ‘என்னை கொலை செய்ய விரும்பினால் கொலை செய்துகொள்ளுங்கள்’ என்று ஆவேசமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில் பணிபுரிந்து வந்த 71 வயதான மூத்த கன்னியாஸ்திரியை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை  கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர்களின் 4 பேர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை சந்தேகத்துக்கு இடமான 10 பேர்களை சி.ஐ.டி. போலீசார்  கைது செய்துள்ளனர். தற்போது, படுகாயம் அடைந்த மூத்த கன்னியாஸ்திரி தற்போது மேற்குவங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்று வரும் கன்னியாஸ்திரியை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று மாலை மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வந்தார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பிச்செல்ல்லும்போது கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்ற கோஷமிட்டு முதல்வரின் காரை வழிமறித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள், மம்தாவின் காருக்கு வழிவிடாமல் தடுத்து நிறுத்தி, காருக்கு முன்பாக தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் பொறுமையாக காரில் காத்திருந்த முதல்வர் மம்தா, பின்னர் ஆத்திரத்துடன் காரை விட்டு கீழே இறங்கி வந்து, மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வினர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவிடாமல் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார். அதன்பின், தன்னை கொலை செய்ய விரும்பினால் தாராளமாக வந்து கொலை செய்து கொள்ளுங்கள் என்று அவர் ஆவேசமாக கூறினார். அதன்பின் போராட்டக்காரர்கள், மம்தாவின் காரை செல்ல அனுமதித்தனர்.

Leave a Reply