மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியினர் ஒருவரால் மிரட்டப்பட்டு ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா அருகில் உள்ள ஹவுரா என்ற இடத்தில் லாட்ஜ் ஒன்றை சுமித் நேஹா என்பவர் நடத்தி வருகிறார். இவருடைய லாட்ஜுக்கு கடந்த 20ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் வந்து தங்குவதற்கு அறை கேட்டதாகவும், அறை காலி இல்லாததால் அவருக்கு அறை கொடுக்க முடியவில்லை என்று அப்போது பணியில் இருந்த மேனேஜர் கூறியுள்ளார். ஆனால் தீபக் சாஹு என்ற அந்த கட்சிக்காரர் ஓட்டல் மேனேஜரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆனதால், அதை ஆதாரமாக வைத்து ஓட்டல் உரிமையளர் சுமித் நேஹா போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரை வாபஸ் பெறும்படி தீபக் சாஹு, சுமித் நேஹாவை பயமுறுத்தியதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் அறிக்கையில் சுமித் நேஹா மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தீபக் சாஹு ஓட்டல் மேனேஜரை அடித்த வீடியோ ஊடகங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல் மேனேஜரை அடித்த தீபக் சாஹுவை கைது செய்யும்படி சுமித் நேஹாவின் தாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.